முகப்பு /செய்தி /இந்தியா / 'இதுதாங்க என் பதில்'.. கேள்வி கேட்டு எச்சரிக்கை விடுத்த ஆளுநர்.. கூலாக பதிலளித்த பஞ்சாப் முதல்வர்!

'இதுதாங்க என் பதில்'.. கேள்வி கேட்டு எச்சரிக்கை விடுத்த ஆளுநர்.. கூலாக பதிலளித்த பஞ்சாப் முதல்வர்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு பதிலளிக்க முடியாது என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Punjab, India

சிங்கப்பூரில் நடைபெற்ற பயிற்சிக்கு அனுப்பிவைப்பதற்காக ஆசிரியர்களை தேர்வு செய்த விவரங்களை அனுப்புமாறு பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதிய நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு பதிலளிக்க முடியாது என்று முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப்பிலிருந்து சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி கருத்தரங்குக்கு அரசு பள்ளி முதல்வர்கள் 36 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் வந்திருப்பதால், ஆசிரியர்களை தேர்வுசெய்ததற்கான விதிமுறைகளை அனுப்பிவைக்குமாறு முதலமைச்சர் பகவந்த் மானுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக 15 நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால், மேல் நடவடிக்கைக்காக சட்ட ஆலோசனை பெற வேண்டியிருக்கும் என்றும் ஆளுநர் எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர், தானும், தனது அரசும் 3 கோடி பஞ்சாபி மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் என்றும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆளுநருக்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையே தனது பதிலாக எடுத்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், பஞ்சாப்பிலும் ஆளுநர்-முதலமைச்சர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


First published:

Tags: Governor Banwarilal purohit, Punjab