இந்திய அளவில் புகழ்பெற்ற தேர்தல் வியுகங்களை வகுத்து தரும் நிபுணரான பிரசாஷ்ந் கிஷோரை முதன்மை தேர்தல் ஆலோசகராக நியமித்துள்ளார் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங்.
இந்திய அரசியலில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி இருப்பவர் பிரஷாந்த் கிஷோர். பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து ஆட்சி மாற்றங்களுக்கு காரணமாக திகழ்பவர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெருவாரியான வெற்றி பெற்றதற்கு பின்னர் இவரின் புகழ் ஓங்கி ஒலித்து வருகிறது.
Indian Political Action Committee (I-PAC) என்ற பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் மூலமாக தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுக்கப்படுகிறது. தற்போது இவர் தமிழகத்தில் திமுக மற்றும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
முன்னதாக டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பீகாரின் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் என கட்சி பாகுபாடின்றி தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.
அதே போல காங்கிரஸ் கட்சிக்காக உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் 2022ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவதற்காக பிரஷாந்த் கிஷோரை முதன்மை தேர்தல் ஆலோசகராக நியமித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங். கடந்த 2017ம் ஆண்டிலேயே கேப்டன் அமரீந்தர் சிங்கிற்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றியுள்ள நிலையில் தற்போது 2ம் முறையாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர் நியமனம் தொடர்பாக கேப்டன் அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரஷாந்த் கிஷோர் எனது முதன்மை ஆலோசகராக என்னுடன் சேர்ந்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன்!” என கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Prashant Kishor