• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பஞ்சாபில் தீவிரமடையும் எல்லை பாதுகாப்பு படை விவகாரம்! சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பஞ்சாபில் தீவிரமடையும் எல்லை பாதுகாப்பு படை விவகாரம்! சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

''எல்லை பாதுகாப்பு படையின அதிகார எல்லையை அதிகரிப்பது, பஞ்சாப் அரசை அவமானப்படுத்தும் செயலாகும். இதுபோன்ற முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது மாநில அரசை கேட்டிருக்க வேண்டும்.''

  • Share this:
    பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பை அதிகரிப்பதற்கு மாநில அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானுடன் எல்லையை பகிரும் பஞ்சாப் மாநிலத்தில், எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவை எல்லைப் பாதுகாப்பு படையினர் (BSF)தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதே அளவு அதிகார வரம்புதான் மேற்குவங்கம் மற்றும் அசாம் எல்லையிலும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சர்வதேச எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவுக்கு தேடுதல் வேட்டை நடத்தவும், கைது செய்யவும், பொருட்களை பறிமுதல் செய்யவும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் அதிகாரம், மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதாக உள்ளதெனக் கூறி, எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

    குறிப்பாக பஞ்சாபில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பிரச்னையை மத்திய அரசு கிளப்பியுள்ளது. இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக, பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதில், 'பஞ்சாப் மக்கள் இந்தியாவின் விடுதலைக்காக உயிர் தியாகங்களை செய்துள்ளனர். தனது சொந்த எல்லையை பாதுகாக்கும் சக்தி பஞ்சாபுக்கு உண்டு. எல்லை பாதுகாப்பு படையின அதிகார எல்லையை அதிகரிப்பது, பஞ்சாப் அரசை அவமானப்படுத்தும் செயலாகும். இதுபோன்ற முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது மாநில அரசை கேட்டிருக்க வேண்டும். பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு பிரச்னை முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் சேவைக்கு அவசியம் இருக்காது. பஞ்சாபில் அனைத்து கட்சிகளும் எதிர்க்கும் சூழலில் மத்திய அரசு தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.' என்று கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: