கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டியை சாலையில் விட்டுவிட சொன்ன குடும்பத்தினர்.. அதிர்ந்து போன மருத்துவமனை ஊழியர்கள்...

கொரோனாவில் இருந்து குணமடைந்த மூதாட்டியை புறக்கணித்த குடும்பத்தினர்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மூதாட்டியை மீண்டும் வீட்டினுள் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என அவரின் குடும்பத்தினர் புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • Share this:
கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த மார்ச் 13ம் தேதி அவரை சின்ஹகத் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த அந்த மூதாட்டி கடந்த செவ்வாயன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்தார்.

மூதாட்டி குணமடைந்த விவகாரத்தை அவரின் மகனிடம் எடுத்துக்கூறி மருத்துவமனையில் இருந்து அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கூட்டிச் செல்லுமாறு அந்த மருத்துவமனையின் மருத்துவர் சுபாங்கி ஷா என்பவர் தொலைபேசியில் கூறியிருக்கிறார்.

இருப்பினும் மூதாட்டியை மீண்டும் வீட்டில் அனுமதிக்க முடியாது என அவரது குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர். உங்கள் தாயை வீட்டிற்கு கூட்டிச்செல்லாவிட்டால் பின் அவரை எங்கே அனுப்புவது என கேட்டிருக்கிறார், இதற்கு சாலையில் விட்டுவிடுங்கள் என பதில் வந்துளது. இதனால் ஆச்சரியமும், அதிர்ச்சியுமடைந்த மருத்துவர் சின்ஹகத் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியை கேட்டிருக்கிறார்.

காவல்துறையினரின் உதவியுடன் மூதாட்டியை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது நாங்கள் இரவு 8 மணியளவில் தான் வீடு திரும்புவோம் என கூறியுள்ளனர். அதுவரை வீட்டு வாசலில் மூதாட்டியை வைத்திருக்க முடியாது என்பதால் மீண்டும் மருத்துவமனைக்கே அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டிருக்கிறார். அடுத்த நாள் காவல்துறையினர் மூதாட்டியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசி அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை கூறி மீண்டும் மூதாட்டியை அவரின் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், அந்த மூதாட்டியின் மருமகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம், செவ்வாய்க்கிழமையன்று தனது தந்தை மரணமடைந்ததால் எங்களால் அவரை கூட்டிச் செல்ல இயலாத நிலையில் இருப்பதாக கூறினார். தாங்கள் பதற்றத்தில் இருந்ததால் குழப்பத்தில் இருந்ததாகவும் தெரிவித்தனர், இருப்பினும் தங்களின் தவறை அவர்கள் உணர்ந்துகொண்டனர் என அவர் தெரிவித்தார்.
Published by:Arun
First published: