யோகா கற்றுக் கொண்டால் இளமையாக இருக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என புதுச்சேரி துணை நிலை அளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரியில் சுற்றுலாத்துறை சார்பில் 27-வது அகில உலக யோகா திருவிழா நேற்று தொடங்கியது. முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விழாவினை தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர்,யோகா என்பது உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பாதுகாக்கக் கூடியது.புதுச்சேரி சித்தர்களின் பூமி. யோகப் பயிற்சி செய்துதான் சித்தர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார்கள் என்றார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியினால் ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாடுவதால் அண்மைக் காலமாக யோகா பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், 27 ஆண்டுகளாக உலக யோகா திருவிழா புதுச்சேரியில் நடக்கிறது என்பது வெகு காலத்துக்கு முன்பே யோகா பற்றி நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது.
இது கொரோனா காலம். யோகாவினால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா, யோகாவினால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியுமா என்ற கேள்விகள் இருக்கிறது.யோகா கற்றுக்கொள்பவர்கள் எந்த கவலையும் இல்லாமல், ஒருவேளை உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் மனது பாதிக்கப்படாமல் மீண்டு வருவார்கள் என்பது அண்மைக் காலமாக எல்லோரும் தெரிந்த கொண்ட உண்மை யோகா உடலுக்கும் மனதுக்கும் பாதுகாப்பு தருகிறது.
குறிப்பாக கொரோனா காலத்தில் யோகா உதவியாக இருக்கும்.யோகா நிச்சயமாக நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. யோகா கற்றுக் கொண்டால் இளமையாக இருக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்என்றும் ஆளுநர் கூறினார்.துவக்க விழாவில் சுற்றுலாத்துறைச் செயலர் அருண், இயக்குனர் பிரியதர்ஷனி ஆகியோர் கலந்து கொண்டனர்.கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை காரணமாக புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக யோகா விழா நடத்தப்படவில்லை. 2ஆண்டு இடைவெளிக்கு பதிலாக இவ்வாண்டு விழா நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.