Home /News /national /

மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு.. மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு.. மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மின் ஊழியர்கள் போராட்டம்

மின் ஊழியர்கள் போராட்டம்

மின்துறை தனியார் மையத்திற்கு அமைச்சரவை அனுமதி..புதுச்சேரி அரசை கண்டித்து மின்துறை ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தங்கள் போராட்டம் இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
புதுச்சேரியில் மின்சாரத் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

யூனியன் பிரதேசங்களின் மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை ஏற்படுத்தி கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவர்களோடு,  முதலமைச்சர், மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மின்துறை ஊழியர்கள், அரசியல் கட்சியினர்,  பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என உறுதியளித்தனர்.

இதையேற்று  போராட்டக்குழுவினர் வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்தினர். தற்போது அரசு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை  எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.  இதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில்,  மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று முதல் மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வம்பாகீரப் பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் மின் அலுவலகங்களை சேர்ந்த ஊழியர்கள் ஒன்று கூடினர். அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் அருள்மொழி தலைமை வகித்திட பொதுச்செயலாளர் வேல்முருகன் மற்றும் அனைத்து தொழிற் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இன்று முதல் மின்துறையில் எழுத்துப்பணிகளை முழுமையாக புறக்கணிப்போவதாக அறிவித்துள்ளனர்

.இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், அரசு  அளித்த வாக்குறுதியை மீறி மின்துறையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைச்சரவை முடிவெடுத்து,  மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்குகிறோம். அதேநேரத்தில் பொதுமக்களுக்கு  தடையில்லாத மின்சாரத்தை வழங்குவோம். பொதுமக்களை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் எங்கள் போராட்டம் இருக்கும்.

பொறியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டும் தொடர்வார்கள். கூடுதல் பணிகளை பார்க்கமாட்டார்கள். எழுத்துப்பணிகளை  முற்றிலுமாக தவிர்க்கிறோம். ஹெச்டி மீட்டர் ரீடிங் எடுக்க மாட்டோம். புதிய மின் இணைப்பு தரமாட்டோம். அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் எங்களின் போராட்டம் தீவிரமடையும். போராட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பேற்க  வேண்டும் என்று கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
Published by:Murugesh M
First published:

Tags: Electricity, Protest, Puducherry

அடுத்த செய்தி