உலக மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒரு நாள் கவுரவ காவல் நிலைய அதிகாரியாக பணியாற்றினார்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் B.Sc. computer science மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி நிவேதா(வயது 19). இவரது தந்தை வைத்தியநாதன் தனியார் கம்பெனி ஓட்டுநராக உள்ளார். மாணவி நிவேதா என்.சி.சி. விமான படையில் cadet sergeant ஆக இருக்கிறார். உலக மகளிர் தினத்தை யொட்டி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு நாள் காவல் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காவல் நிலையம் வந்த இவர் காவலர் அணிவகுப்பை ஏற்றார். பின்னர் காவலர்களை எந்தந்த பகுதிக்கு செல்வது என பிரித்து கொடுத்தார்.
காவல்நிலையத்தில் இன்று விசாரிக்க வேண்டிய வழக்குகள் குறித்து நிரந்தர அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இது குறித்து நியூஸ் 18க்கு அவர் அளித்த பேட்டியில்,பெண்கள் அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரு நாள் காவல் நிலைய அதிகாரியாக செயல்படுவதில் பெருமைப்படுகிறேன். முதல்முறையாக ஒரு காவல் அதிகாரியாக செயல்படுகிறேன். எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரியாக செயல்படுவேன் என்கிறார்.
காவல்துறை சார்பில் ஒருநாள் நிலைய அதிகாரியாக மாணவி ஒருவரை நியமிக்க காவல் கண்காணிப்பாளர் தீபிகா திட்டமிட்டார். உலக மகளிர் தினத்தை யொட்டி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மாணவி ஒருவரை நிலைய அதிகாரியாக நியமித்து இளைஞர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தினார். இதற்காக என்.சி.சி அலுவலகத்திற்கு அலுவலக ரீதியாக கடிதம் அனுப்பியதில் அவர்கள் மாணவி நிவேதாவை தேர்வு செய்து அனுப்பினார்கள். புதுச்சேரி காவல்துறை வரலாற்றில் மாணவி ஒருவர் கவுரவ நிலைய அதிகாரியாக செயல்படுவது இதுவே முதல்முறை.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.