புதுச்சேரியில் கம்பன் கலை அரங்கத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் துவக்க விழா இன்று மதியம் நடந்தது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 204 கோடி ரூபாய்க்கான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
ரூ.45 கோடி மதிப்பில் குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, ரூ.33 கோடி மதிப்பில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு அடிக்கல் நாட்டுவது, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ.70 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைவது, புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு 49 கோடி ரூபாய்க்கு கட்டிடட வசதிகள் உட்பட பல திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், கடந்த ஆட்சியில் செய்ய முடியாத திட்டங்களை செயல்படுத்துகிறோம். பொலிவுறு நகர திட்டத்தை கடந்த ஆட்சி செயல்படுத்தவில்லை. புதிய அரசு அமைந்தவுடன் மத்திய அரசின் ஆதரவுடன் 600 கோடி ரூபாய்க்கான திட்டங்களைளை துவக்கியுள்ளோம் என்றும் புதுச்சேரியின் நீண்ட நாள் கோரிக்கை மாநில அந்தஸ்து. இதை மத்திய அரசு வழங்கும் என நம்பிக்கையுள்ளது.
பிரதமர் கூறிய பெஸ்ட் புதுச்சேரியை கொண்டு வருவோம். புதுச்சேரிக்கு கூடுதல் நிதி வழங்க அமித்ஷா நடவடிக்கை எடுப்பார் என்றும் பேசினார். அடுத்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் எல்லா விதத்திலும் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது.
ALSO READ | விசிகவினர் பாஜக அலுவலகத்திற்கு வந்து புத்தகங்களை கொடுக்கலாம் – அண்ணாமலை அழைப்பு
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி புதுச்சேரி மாதிரி மாநிலமாக உயரும் என்று கூறினார். அமித்ஷா வருகையால் புதுச்சேரி வளர்ச்சி வேகம் எடுக்கும். எதிர்ப்பவர்கள் புதுச்சேரி வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
அடுத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புண்ணிய பூமியான புதுச்சேரியை வணங்குகிறேன். பாரதி, அரவிந்தரின் கர்ம பூமியாக புதுச்சேரி திகழ்கிறது. விவிஎஸ் ஐயர், பாரதிதாசன் ஆகியோரை சேவையாற்ற அனுப்பியது. மக்களின் தீர்ப்பால் தான் என்.ஆர்.காங்-பாஜக அரசு செழிப்பாக இருக்கிறது. புதுச்சேரியை பெஸ்ட் ஆக மாற்றி விட்டு தான் அடுத்த முறை மக்களை சந்திக்க வருவோம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
புதுச்சேரியில் சூரிய சக்தி மூலம் 26 மெக வாட் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்றும் ரங்கசாமி, நமச்சிவாயம் தலைமையில் பிரதமர் கூறிய பெஸ்ட் புதுச்சேரியை மாற்றி காட்டுவோம் என்றும் அமித்ஷா கூறினார்.
தொடர்ந்து தஞ்சை மற்றும் கொல்கத்தாவின் கலைக்குழுவின் தேச பக்திகளின் நிகழ்ச்சியை அமித்ஷா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்த்தனர். அடுத்து பாஜக அலுவலகம் சென்ற அமித்ஷா நிகழ்ச்சிகளை முடித்து மாலை 5 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டார். அவருடன் துணைநிலை ஆளுநர் தமிழிசையும் சென்னை சென்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.