புதுச்சேரியில் நடைபெற்ற
பாஜக மகளிரணி தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.
பாஜக மகளிரணி தேசிய நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் கம்பன் கலையரங்கில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் புதுச்சேரி ராஜ் நிவாஸ் அருகே உள்ள மகாகவி பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தேசிய அளவிலான மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரியில் முதன் முறையாக நடைபெற உள்ளது. அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அதன் பலன்கள் குறித்து விளக்கபட உள்ளது என்று கூறினார்.
75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் அதன் ஒரு பகுதியாக பெண் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்க பட உள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுயமரியாதை திருமணங்களுக்கு நாடு முழுவதும் சட்டப்பூர்வ அங்கீகாரம்: மக்களவையில் திமுக வலியுறுத்தல்
மேலும், புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உள்ள நிலையில் அடுத்ததாக ஆந்திரா, தமிழகம், மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கும் என்று தெரிவித்த வானதி சீனிவாசன் இந்த எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறையாது என்றார்.
புதிய முதலீடுகளை உருவாக்கவும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் பயணத்தை வரவேற்கிறோம்; அதே சமயத்தில் நாங்கள் விமர்சனம் செய்யவில்லை என்று தெரிவித்த வானதி சீனிவாசன் ,’இதே நோக்கத்திற்காகத் தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்குச் சென்றார். அப்போதெல்லாம் திமுக விமர்சனம் செய்தாக சுட்டிகாட்டினார்.
மேலும் படிக்க: ஆளும் கட்சி பிரமுகர் அழுத்தம்.. தனியார் பள்ளி நிர்வாகம் அட்டூழியம்.. மன வேதனை தாங்காமல் மாணவி தற்கொலை..
பாலியல் குற்றத்தில் யார் ஈடுபட்டாலும் அதிகபட்ச உச்சபட்ச தண்டனை என்னவோ அதுதான் கொடுக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு சம்மந்தமாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், பாலின சமத்துவம் என்பது சட்டமன்றத்தில் இருந்து துவங்க வேண்டும் என்றும் விவகாரத்தில் உணர்வுபூர்வமாகவும் நுணுக்கமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.