• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு : மத்திய அமைச்சர் காணொலியில் ஆய்வு

புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு : மத்திய அமைச்சர் காணொலியில் ஆய்வு

புதுச்சேரி கடற்கரையில் ஆய்வு

புதுச்சேரி கடற்கரையில் ஆய்வு

புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கடற்கரை மணல் பரப்பு திட்டத்தை அமைச்சர் ஜிதேந்தர்சிங் காணொலியில் பார்வையிட்டார்.

  • Share this:
புதுச்சேரியில் தற்போது செயற்கை மணல் பரப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்து வரும் நிலையில், நாடுமுழுவதும் இதேபோல செயல்படுத்தப்படும் திட்டங்களை மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்தர் சிங் காணொலி மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2004ஆம் ஆண்டு  சுனாமி தாக்குதலுக்கு பிறகு புதுச்சேரியில் கடற்கரை மணல்பரப்பு முற்றிலும் காணாமல் போனது. இதனால் சுற்றுலா பயணிகள்  மணல் பரப்பை பார்க்க முடியாமல் ஏமாறும் சூழல் இருந்தது. இதனையடுத்து மணல் பரப்பை மீண்டும் கொண்டு வர மத்திய அரசின் உதவியை புதுச்சேரி அரசு நாடியது.

இதற்கான ஆய்வை தேசிய கடல் தொழில்நுட்ப கழகம் மேற்கொண்டது. மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.24 கோடியில் கடற்கரை காந்தி சிலை பின்புறம், மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக இரும்பு மிதவை தலைமை செயலகம் எதிரே கடலில் அமிழ்த்தப்பட்டது.

இதனால் தற்போது செயற்கை மணல் பரப்பு உருவாகியுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நாடுமுழுவதும் இதேபோல செயல்படுத்தப்படும் திட்டங்களை மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்தர் சிங் காணொலி மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதற்காக தேசிய கடல் தொழில்நுட்ப கழக அறிவியல் அதிகாரி சுரேஷ், தேசிய கடல் தொழில்நுட்ப கழக விஞ்ஞானிகள் பனிக்குமார், முல்லைவேந்தன், ராம்குமார், ராம்சந்தர், புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்ப துறை செயலர் ஸ்மித்தா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஏழுமலை மற்றும் துறைமுக அதிகாரிகள்  கடற்கரைக்கு வந்தனர்.

காணொலி காட்சி மூலம் புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள மணல் பரப்பை மத்திய அமைச்சர் பார்வையிட்டார். மணல் பரப்பை உருவாக்கிய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மத்திய அமைச்சரிடம் அடுத்தகட்டமாக மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

இதுகுறித்து தேசிய கடல் தொழில் நுட்ப கழக அறிவியல் அதிகாரி சுரேஷ் கூறுகையில், நாட்டின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் ஒரு விழா நடத்தப்படுகிறது. இதன்படி புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள கடற்கரை மணல் பரப்பு திட்டத்தை அமைச்சர் ஜிதேந்தர்சிங் காணொலியில் பார்வையிட்டார்.

புதிய தொழில்நுட்பம் மூலம் தலைமை செயலகம் எதிரே 975 டன் இரும்பு மிதவை கடலில் அமிழ்த்தப்பட்டுள்ளது. இது தேவையான மணலை கடற்கரையில் சேர்க்கும். குருசுகுப்பம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும். துறைமுகமுகத் துவாரத்தில் தூர்வாரப்படும் மணலும் கடற்கரையில் கொட்டப்படுகிறது. இதனால் கடந்த காலத்தில் இருந்ததுபோல அழகிய கடற்கரை மணல்பரப்பு உருவாகியுள்ளது. அடுத்தகட்டமாக சீகல்ஸ் அருகே, இரும்பு மிதவை கடலில் அமிழ்த்தப்பட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என  தெரிவித்தார்.

இது குறித்து உள்ளூர் துறைமுக அதிகாரிகள் கூறுகையில், துறைமுக முகத்துவாரத்தில் 1985ல் கல் கொட்டப்பட்டது. இதனால் 2 கி.மீ தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்படும். இதனால் முகத்துவாரம் வழியே 4 லட்சம்  க்குயூப்பிக் மீட்டர் மணலை தூர்வாரி புதுச்சேரி கடற்பகுதியில் கொட்ட அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படாததால் புதுச்சேரி கடற்பகுதியில் மணல் பரப்பு காணாமல் போனது.

தற்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு 27 கோடி ரூபாய் செலவில் 7 லட்சம் மீட்டர் க்குபீக் மணலை அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் மீட்டர் க்குபீக் காந்தி சிலை அருகில் கொட்டப்படுகிறது. 2 லட்சம் மீட்டர் க்குபீக் மணலை கடற்கரையில் கொட்டி சூரிய ஒளியில் வைத்து மாசுகளை அகற்றி மீண்டும் கடலில் கொட்டப்படும்.

Must Read : மத்திய உணவுத்துறை அதிகாரிகள் நாளை டெல்டா மாவட்டங்களில் ஆய்வு

ஒட்டுமொத்தமாக மூன்றரை லட்சம் மீட்டர் க்குபீக் மணல் கொட்டப்பட்டுள்ளது. இதன் பயனாக மணல் பரப்பு உருவாகி வருகிறது என்று தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: