புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - தப்புமா நாராயணசாமி அரசு?

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

 • Share this:
  புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 14 ஆக குறைந்தது. நியமன எம்எல்ஏக்களுடன் சேர்த்து எதிர்க்கட்சிகளின் பலமும் 14 ஆக இருந்ததால், சட்டப்பேரவையில் திங்கள்கிழமைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். அதன்படி, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை திங்கட்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில், சபாநாயகர் சிவக்கொழுந்துவை நேற்று சந்தித்த ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படாததால் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.

  லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்த சிறிது நேரத்தில், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் வெங்கடேசனும் பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ள ராஜினாமா கடிதம் குறித்து, சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.

  திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளது. அ.தி.மு.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சி கூட்டணி 14 உறுப்பினர்களை பெற்றுள்ளது.

  நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கருத்தை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் விஜயன் விளக்கம் அளித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக, நியமன உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக, பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் தினமும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், திட்டமிட்டபடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? அதில், நாராயணசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  இந்தநிலையில், காங்கிரஸ், தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ‘நாளை சட்டமன்றத்திற்கு செல்வதற்கு முன்னதாக நாளை காலை ஆலோசிக்கப்படும். இன்றைய கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்கவில்லை. நாளைக்கு சட்டமன்ற கூடும் நேரத்தில் காலை 10 மணிக்கு இறுதி முடிவு எடுக்கப்படும். சட்டமன்றத்தில் எங்களது நிலைப்பாடு வெளிப்படும்’ என்று தெரிவித்தார்.

  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: