Home /News /national /

பொய் புகார் கூறும் எம்.எல்.ஏக்கள் மனநல மருத்துவர்களை அணுகவும் - கிரண்பேடி காட்டம்

பொய் புகார் கூறும் எம்.எல்.ஏக்கள் மனநல மருத்துவர்களை அணுகவும் - கிரண்பேடி காட்டம்

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

பொய் புகார் கூறும் எம்எல்ஏக்கள் மனநல மருத்துவர்களை அணுகவும் என புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடுகளை சில எம்எல்ஏக்கள் விமர்சித்துப் பேசினர். அது பற்றி கிரண்பேடி விடுத்துள்ள செய்தியில், பேரவையில் எம்எல்ஏ ஒருவர் பேசும்போது நான் டாக்டர்களுக்கு எதிராகப் பேசினேன் என்கிறார். இது 100% உண்மைக்குப் புறம்பானதாகும். இதேபோல் அரசு ஊழியர்களின் மாதச் சம்பளம் உட்பட பல விவரங்கள் பற்றி  பொய்யுரைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், பஞ்சாபில் வீட்டு உரிமையாளர்களுக்கு நான் வாடகை பணம் கொடுக்கவில்லை என்றும் இது தொடர்பாக என் மீது வழக்கு உள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதுவும் 100% உண்மைக்குப் புறம்பானதே. வீட்டு உரிமையாளர்  வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தி வருகிறேன் என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சில எம்எல்ஏக்கள் மக்களை திசை திருப்பும் வகையில் வேண்டுமென்றே என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அவர்கள் எதற்காக அவ்வாறு கூறுகிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் மனநல மருத்துவர்களை அணுகலாம் என்று காட்டமாகக் கூறினார்.

இதனிடையே தன்னை எதிர்த்து போராடும் மருத்துவர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளிக்கையில், கொரோனா பரவலால் ஏற்படும் அதிக பணிச் சுமையில் கடினமான சூழலில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிவதை நான் நன்கு அறிவேன்.

இது போன்று மற்ற எல்லா அத்தியாவசியச் சேவைகளிலும் கடினமான சூழல் உள்ளது. 24X7 பணிபுரியும் காவல்துறையிலும் இதே நிலைதான். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று பணி புரியும் அனைவருக்கும் நான் என்னுடய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Also read: எதிர்ப்பு முதல்வருக்கு மட்டுமே ; கட்சிக்கு இல்லை - சச்சின் பைலட் தரப்பு வாதம்

மேலும் கூறுகையில், சனிக்கிழமையன்று  சுகாதாரக் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றேன். பொது சுகாதார மையங்களை ஆய்வு செய்யும் மருத்துவ அதிகாரியிடம் அங்கு அத்தியாவசியமான கேள்விகளுக்குப் பதில் இல்லை. இக்கடினமான சூழலைச் சமாளிப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் அங்கு இல்லை.

ஆதலால், இச்சூழ்நிலையை போர்க்கால அடிப்படையில் எவ்வாறு கையாள்வது என்று நான் அவருக்கு அறிவுறுத்தினேன். அவர் இனிமேல் தேவையான அனைத்தையும் சரியாகச் செய்வதற்கு எனக்கு  உறுதியளித்தார். அதன் பிறகு நான் அவருக்கு நல்வாழ்த்துகளைக் கூறி தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்க உறுதி அளித்தேன் என்று துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார்.

காக்கி உடை அணிந்த   வீரர்களுக்கு நிகராக வெள்ளை உடை அணிந்த மருத்துவர்களின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாகக் கூறிய அவர், இத்தருணத்தில் COVID தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன், இந்த நேரத்தில் கவனத்தை சிதறவிடாதீர்கள்; ஏனெனில் இது மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்டது.

எனது அறிவுரையினால் எவர் ஒருவருடைய மனம் புண்பட்டிருந்தாலும்  நெருக்கடியான தருணத்தில் நான் என் கடமையைச் செய்கிறேன் என்று மட்டுமே கூற விரும்புகிறேன். நான் எதற்காக பணியமர்த்தப்பட்டேனோ அப்பணியை என் மனசாட்சிப்படி  செய்கிறேன். இதில் எந்த சுயநலமும் இல்லை. மேலும், இதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் என்னை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளார் கிரண்பேடி.
Published by:Rizwan
First published:

Tags: Kiran bedi, Puducherry

அடுத்த செய்தி