புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் கோவிட் மேலாண்மை குழுவின் அவசர கூட்டம் நேற்று மாலை துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தலைமைச் செயலர் அஷ்வனி குமார், கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆனந்த மோகன், சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வல்லவன், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு, கோவிட் தலைமை அதிகாரி டாக்டர். ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி பிரதிநிதி டாக்டர். சாய்ரா பானு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சுகாதாரத்துறை இயக்குனர், புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார். கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும், மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும், திருமணங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்று கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், அறிவியல் பூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நீண்ட நாட்களுக்கு பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். அதனால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதால். மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
அதிகாரிகள் எந்த நேரமும் ஆய்வு செய்யலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை என்றாலும் காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என அரசை அறிவுறுத்தியுள்ள தமிழிசை, இனி தடுப்பூசி தேவைப்படுவோர் மருத்துவமனைகளுக்கு சென்றுதான் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
Read More : ஜல்லிக்கட்டு: வெளியூர் நபர்களுக்கு அனுமதி கிடையாது...ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம்
அவசியம் மற்றும் அவசர காரணங்களுக்காக மட்டும் மக்கள் மருத்துவமனைகளுக்கு வரலாம். அல்லாத நிலையில் இணைய வழியாக ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக முறையான முன்பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
Must Read : ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிப்பு - முழு விவரம்
தமிழகத்தை யொட்டியுள்ள புதுச்சேரியில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு இணக்கமான முடிவே எடுக்கப்படும். ஆனால் சமீப காலமாக புதுச்சேரியில் என்.ஆர்.காங்-பாஜக கூட்டணி அரசு தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதித்தாலும் புதுச்சேரியில் பின்பற்றாதது கவனிக்கதக்கது.
உங்கள் நகரத்திலிருந்து(Puducherry)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.