Home /News /national /

மக்கள் நலனை முன்னிறுத்தி தெலங்கானா பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்துவிட்டேன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

மக்கள் நலனை முன்னிறுத்தி தெலங்கானா பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்துவிட்டேன் - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

Tamilisai Soundararajan : ஆளுநர் உரையில்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம். ஆனால் ஆளுநர் கையெழுத்து இல்லாமல் அரசியலமைப்பு சட்டப்படி பட்ஜெட் செயலுக்கு வராது.

தெலங்கானாவில் ஆளுநர் உரையில்லாமல் பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மக்கள் நலன் மட்டும்தான் முக்கியம் என்பதால் அன்று மாலையே பட்ஜெட்டில் கையெழுத்திட்டேன் என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். 

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் கம்பன் கலையரங்கத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பல்வேறு சாதனைகள் படைத்த பெண்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். பின்னர்  பேசிய தமிழிசை, பெண் விடுதலை, பெண் உரிமை பற்றி பேசுகிறோம். நேற்று தெலங்கானா மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பெண் ஆளுநர் உரையில்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இதற்கு சட்டசபையை ஒத்திதான் வைத்துள்ளோம். முடித்து வைக்கவில்லை என காரணம் கூறுகின்றனர்.

ஆளுநர் உரையில்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம். ஆனால் ஆளுநர் கையெழுத்து இல்லாமல் அரசியலமைப்பு சட்டப்படி பட்ஜெட் செயலுக்கு வராது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் ஆளுநர் கையெழுத்து போடுவாரா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்தது. மக்கள் நலன் மட்டும்தான் முக்கியம். அன்று மாலையே பட்ஜெட்டில் கையெழுத்திட்டேன் என்றார். "இன்னா செய்தாரை ஒருத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்றும், "பகைவனுக்கும் அருள்வாய்" என முன்னோர்கள் கூறியுள்ளனர். அதுபோல புதுச்சேரி முதலமைச்சர் அனுப்பும் கோப்புகளிலும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி பார்க்கிறேன். பெண்களுக்கு முழு உரிமை கிடைத்துவிட்டதா? என்றால் இன்னும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.

பெண்கள் இன்னும் தங்கள் நிலையில் இருந்து உயர வேண்டும். சொத்துரிமை கொடுத்துள்ளது போல, தொழில் தொடங்கவும் முன்னுரிமை அளித்துள்ளனர். இதனால் பெண்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். பெண் முன்னேற்றத்துக்கு முன்பாக பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற வேண்டும். அதற்கான அதிகாரத்தை பெற பெண்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் தமிழிசை அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், ஒரு குடும்பத்தின் முன்னேற்றமே பெண்களைத்தான் சாரும். ஒரு குடும்பத்தை பற்றி தெரிந்துகொள்ள தாய் பற்றி தெரிந்தாலே போதும். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பார்கள். சிவனே தன்னில் பாதியை சக்திக்கு கொடுத்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளித்தோம், பெண்ணுக்கு அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளோம். கடந்த காலங்களில் வீரமான பெண்கள் இருந்துள்ளனர். அரசருக்கே ஆலோசனை அளித்த பெண் புலவர்களும் இருந்துள்ளனர். ஆனால் பெண் புத்தி பின்புத்தி என்பார்கள். அதை பெண்களுக்கு பின்னால் வரக்கூடியதை அறிந்துகொள்ளும் புத்தி உள்ளது என எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக்கலும், அழித்தலும் பெண்கள் என்பார்கள். புராணகாலத்தில் கெட்டவனை அழிப்பது பெண் கடவுள்கள் தான் என்றார்.

மேலும், பெண்களுக்கு உரிமை கிடைக்க புதுவையில் சொத்துக்களை பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் 50 சதவீத கட்டண தள்ளுபடி அளித்தோம். இதனால் சொத்துக்கள் பெண்கள் பெயரில் பதியப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. பெண்கள் பெயரில் தொழில் தொடங்கினால் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளோம். பெண்கள் பலர் தொழில் தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நான் முடிவெடுத்தபோது அப்போதைய தலைமை செயலாளர் பல்நோக்கு ஊழியர்கள் என்ற தலைப்பில் பணி நிரந்தரம் செய்யலாம் என்றார். எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், பணி நிரந்தரம் செய்யுங்கள் என்றேன்.

Read More : வேலை வாய்ப்புக்கு உதவும் ‘பாலம்’ திட்டம் - கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

பெண்கள் எந்த வேலையையும் திறம்பட செய்வார்கள் என முடிவெடுத்தேன். அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்ட 3 மசாதத்தில் கனமழை பெய்தது. அப்போது நிவாரணமாக அரிசி வழங்கும் நிலை உருவானது. 2 நாளில் அங்கன்வாடி ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று சேர்த்தனர். நிவாரண நிதியையும் கொண்டுசென்று சேர்த்தனர்.

Must Read : உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர் முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கமான கோரிக்கை : தூதரகம் போதிய கவனம் செலுத்தவில்லை என கவலை

புதிதாக அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என கேட்டு வருகின்றனர். இன்னும் 2 நாளில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கும் என ரங்கசாமி  தெரிவித்தார். நிகழ்ச்சியில்சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார்,  உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Published by:Suresh V
First published:

Tags: Puducherry, Tamilisai Soundararajan, Telangana, Women's Day

அடுத்த செய்தி