• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி ஆளுநரின் ஆலோசகர்களுக்கு அதிக செலவு.. விசாரணை நடத்த தமிழிசை உத்தரவு

புதுச்சேரி ஆளுநரின் ஆலோசகர்களுக்கு அதிக செலவு.. விசாரணை நடத்த தமிழிசை உத்தரவு

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

ஏற்கெனவே அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் போடாத நிலையில் இரு மாதங்கள் மட்டுமே பணியில் இருந்த ஆளுநரின் ஆலோசகர்களுக்கு ஊதியம், உதவியாளர், வாகனங்கள், இல்லம் என அரசு நிதி செலவிடப்பட்டது.

  • Share this:
துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்கள் தங்குவதற்கு, அரசு இல்லம் சீரமைக்க பெருமளவு தொகை செலவு செய்யப்பட்டுள்ளது தொடர்பான ஆர்டிஐ தகவலையடுத்து விசாரணை நடத்தி அறிக்கை தர தலைமைச்செயலருக்கு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டு கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி புதிய துணைநிலை ஆளுநராக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து குடியரசுத்தலைவர் ஆட்சி அமலானது. அதையடுத்து ஆளுநரின் ஆலோசகர்களாக பிப்ரவரி 26ஆம் தேதி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அதையடுத்து சட்டப்பேரவையில் முதல்வரின் செயலர் இருந்த அறை, அருகிலுள்ள மற்றொரு அறை ஆகியவை ஆளுநரின் இரு ஆலோசகர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி ஒதுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிக சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஏற்கெனவே 25க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ள சூழலில் ஆளுநர் மாளிகையில் ஆளுநருக்கு தனி அரசு செயலர் மற்றும் ஏராளமான அரசு அலுவலர்கள் இருக்கும் சூழலில் ஆளுநரின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்து, முதலமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்றவுடன் ஆளுநரின் ஆலோசகர்கள் பதவிகாலம் முடிவடைந்தது. சுமார் இரு மாதங்கள் மட்டுமே அவர்கள் பணியில் இருந்தனர். அத்துடன் சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த ஆலோசகர்களின் அறைகள் காலி செய்யப்பட்டன.

ஏற்கெனவே அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் போடாத நிலையில் இரு மாதங்கள் மட்டுமே பணியில் இருந்த ஆளுநரின் ஆலோசகர்களுக்கு ஊதியம், உதவியாளர், வாகனங்கள், இல்லம் என அரசு நிதி செலவிடப்பட்டது. இதுபற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் பெற்ற சமூகசேவகரான, ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, "ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மாத ஊதியமாக மொத்தம் ரூ. 2.8 லட்சமும், இவர்களுக்கு உதவியாளர்களாக வேறு அரசு துறையில் இருந்த நான்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் ஆளுநர் ஆலோசகர் தங்க அரசு இல்லம் ரூ. 14.65 லட்சத்தில் செலவு செய்து சரி செய்து தரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த இல்லத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ. 12 லட்சம் செலவில் சீரமைத்திருந்தனர். தற்போது ரூ. 5 லட்சம் செலவிட்டு சீரமைத்துள்ளதுடன் வீட்டு உபயோக பொருட்களாக கட்டில், மெத்தை, சோபா, சேர் என ரூ. 9.65 லட்சத்துக்கு வாங்கி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது என்றார்.

பொறுப்பு ஆளுநரின் ஆலோசகர்களுக்கு இரண்டு மாதத்தில் ஊதியம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கிய செலவு உள்பட அனைத்து செலவும் ரூ. 24.05 லட்சம் செலவிடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

Must Read : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி

இந்த விவகாரத்தில் தெலங்கானாவில் தற்போது உள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமைச்செயலர் அஸ்வனி குமாருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், "ஆலோசகர்கள் தங்க அரசு இல்லத்துக்கு பெருமளவு தொகை செலவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும். முழு விவரங்களை அறிக்கையாக தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: