Tamilisai Soundararajan : புதுச்சேரியில் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

  • Share this:
புதுச்சேரியில் ஜனவரி 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்பின் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இதனிடையே 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து இன்று முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் முன்பதிவு செய்தனர்.

முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த மையத்தில் எந்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற தகவல் அனுப்பப்பட்டது. அந்த மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, கோரிமேடு பல் மருத்துவக்கல்லூரி, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, கோரிமேடு அரசு நெஞ்சக மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காரைக்காலில் காமராஜர் கல்லூரி வளாகம், மாகே, ஏனாமில் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று காலை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போட வந்திருந்த இளைஞர்களை பாராட்டிய தமிழிசை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “18 வயதை கடந்தவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போட தொடங்கியுள்ளோம். இளைஞர்களிடம் அபரிதமான ஆதரவு உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இஎஸ்ஐ மருத்துவமனையில் மட்டும் இன்று 400 பேர் பதிவு செய்துள்ளனர். நாளை ஊசி போட 400 பேர் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக ஆயிரத்து 600 பேர் பதிவு செய்துள்ளனர்.



இளைஞர்கள் பெரியவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளனர். தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள், உறவினர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்து தடுப்பூசி போட இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 45 வயதை கடந்தவர்களிடம் ஊசி போட தயக்கம் உள்ளது. இந்த தயக்கத்தை இளைஞர்கள்கள் போக்க வேண்டும்.

Must Read : சேலத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைளைக் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

ஊசி போட வந்ததுபோல, சமூக அக்கறையோடு முக கவசம் அணிய வேண்டும். வீட்டை வீட்டு வெளியே சுற்றுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டால் 3வது, 4வது என எந்த அலை வந்தாலும் கவலைப்பட வேண்டாம்.” இவ்வாறு தமிழிசை கூறினார்.
Published by:Suresh V
First published: