பீட்சாவிற்கு பதில் ஆப்பமும், பர்கருக்கு பதில் புட்டும் சாப்பிடுங்கள் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகமும் புதுச்சேரி நலவழித்துறையும் இணைந்து ஆரோக்கியமான இந்தியாவை நோக்கி’ - ‘மாபெரும் சுகாதாரத் திருவிழாவை புதுச்சேரியில் இன்று துவக்கின. துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் சுகாதார விழாவினைத் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் துணைநிலை ஆளுநர் ஆற்றிய உரையில் சுகாதாரத் திருவிழாவை புதுச்சேரி மக்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எந்த திருவிழாவாக இருந்தாலும் அது புதுச்சேரிக்கும் வரவேண்டுமென்பதில் பாரதப் பிரதமர் உறுதியோடு இருக்கிறார். ஆகவே எல்லா திருவிழாக்களும் புதுச்சேரிக்கு வருகின்றன. அதற்காக பிரதமருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் உடல்நலத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நோயுற்றவர்களுக்கு உதவும் வகையில் ரூ. 5 லட்சம் வரை வழங்க “ஆயுஷ்மான் பாரத்“ திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் புதுச்சேரியில் தான் அதிக சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதற்கான விருதையும் புதுச்சேரி பெற்றிருக்கிறது. தடுப்பூசிதான் இன்று நம் அனைவரையும் ஒன்றாக கூடி அமர வைத்திருக்கிறது. ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நாம் எதையும் சாதிக்க முடியும். சுகாதாரத்தறைச் செயலரும் மருத்துவத் துறையினரும் தடுப்பூசியை தெருத்தெருவாக எடுத்துச் சென்றதில் முக்கிய பங்காற்றினார். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.
புதுச்சேரியில் கொரோனாவைக் கட்டுப்படுத்த வியாழக் கிழமை தோறும் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெறவில்லை. அதனால் தான் புதுச்சேரியில் கொரோனாவைக் முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது. நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக வரும் முன் காப்பதுதான் நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்தது நோய் தடுப்பு நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். சிறுதானியங்கள், பயிறு வகைகள், கீரைகள்-பழங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மொத்தத்தில் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகள் உலகத் தரத்தில் மருத்துவச் சிகிச்சை அளித்து வருகின்றன. மற்ற நாடுகளிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக புதுச்சேரியை நாடி வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் 40 % நோயாளிகள் தமிழகத்தை சார்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் புதுச்சேரியை நோக்கி வரும் அளவிற்கு நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
நோய் வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும். கரன்சியை எண்ணுவது wealth. கலோரியை எண்ணுவது Health. ஒரு மைசூர் பாகு சாப்பிட்டால் அது வெளியேற ஒரு வாரமாகும். அதனால் உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும். எவ்வளவு திறமைசாலியாக இருப்தாலும் நோய் வந்து மீளுவது கடினம்.
உடற்பயிற்சி, நடைபயிற்சியால் உடலை கட்டுக்குள் வைக்க வேண்டும். மனநலத்தை காக்க யோகா அவசியம் என்றார். பீட்சாவிற்கு பதில் ஆப்பம், பர்க்கருக்கு பதில் புட்டு என சாப்பிடுங்கள். தட்டை சுருக்கினால் வயிறு சுருங்கும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.