புதுச்சேரியை தொழில் நகரமாக மாற்ற தொழில் முனைவோர்களை அரசு வருக.. வருக.. என்று வரவேற்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு மற்றும் நிபுனா சேவா இன்டர்நேஷனல் இணைந்து லோகேஸ்வரா ஆராதனா என்ற பெயரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடத்தியது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொண்டனர்.
இதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியாக தேர்வு செய்யும் இடங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தேர்ந்தெடுத்தனர். சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்பவரகள வந்து செல்ல புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வரை இலவச பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் கொரோனா வழி காட்டு நெறிமுறைகள் படி அனைவருக்கும் முக கவசம் அணிதல் உள்ளிட்டவைகள் பின்பற்றப் பட்டது.
இதில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், இளங்கலை, அறிவியல், வரலாறு, வணிகவியல், பொருளாதாரம், எனப் படித்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் .
அவர்களுக்கு விருப்பமான வேலைகளையும் தேர்வு செய்து கொண்டு பணியை பெற்றுச் சென்றனர்.
முகாமை துவக்கி வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசும்போது, புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறோம், தேவைப்பட்டால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூட வேலை வாய்ப்பு முகாமை நடத்த அரசு தயாராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும். இளைஞர்களை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசியவர், வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு வாய்ப்பு தவற விட்டாலும் அவர்கள் மேலும் தம்மை தயார்படுத்தி அடுத்த வாய்ப்பில் அவர்கள் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்றும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே பெண்களுக்கும் அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்க வேண்டும், குடும்பத்தை காப்பதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்று குறிப்பிட்டார் அவர் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேலை மட்டும்தான் முக்கியமில்லை கைத்தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
இளைஞர்கள் அனைவரும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் துணை நிலை ஆளுநர் தனது உரையின்போது கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.