புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் கலை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என பொதுநல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட அரசு சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு இடங்களில் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தேசிய அளவில் புகழ்பெற்ற 45 நடன குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கமர் பிலிம் பேக்டரி சார்பில், பழைய துறைமுகத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை சன்னி லியோனின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 30, 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய மூன்று தினங்கள், பிரபல நடிகை சன்னி லியோனின் கலை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட இணையதளம் மூலம் டிக்கெட்டுகள் விற்பனையும் சூடுபிடித்தது. ஒரு டிக்கெட் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சன்னிலியோனின் நிகழ்ச்சிக்கு தமிழர் தளம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தமிழர்களம் அமைப்பினர் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடற்கரை சாலையில் ஒன்று திரண்டு கலை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை இழுத்து மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் தடுப்புக் கட்டைகளைப் பயன்படுத்தி தடுத்தபோது அவற்றைத் துாக்கி எறிந்து நிகழ்ச்சி நடக்க உள்ள அரங்கை நோக்கி போராட்டக்காரர்கள் ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் மீண்டும் அவர்களை தடுத்தபோது இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தொடர்ந்து கூட்ட அரங்கிற்குள் சென்ற அவர்கள் கதவை திறந்து சென்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சன்னிலியோனின் நிகழ்ச்சி புதுச்சேரியின் கலாச்சாரத்தை சீரழிக்கும் முயற்சி என எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேர போராட்டத்திற்குப் பின் போலீசார் அவர்களைக் கைது செய்து அங்கிருந்து அகற்றினர். அதேநேரம் அறிவித்தபடி வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு முதல் நாள் நிகழ்ச்சியில் சன்னிலியோன் பங்கேற்றார். எனினும் இதுவரை சன்னிலியோனின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.