புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வீசிய வழக்கில் 6 பேரை குற்றவாளி என சிறப்பு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
புதுச்சேரியின் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான நாராயணசாமியின் வீடு புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ளது . இந்த வீட்டின் முன் கடந்த 2014 ஜனவரி 29ம் தேதி பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் ( என்ஐஏ ) விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருசெல்வம், தமிழரசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சேலம், சென்னை, கடலூர், வேலூர் என பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் .
இவ்வழக்கு புதுச்சேரியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் (தலைமை நீதிமன்றம் ) நடந்து வந்தது. வழக்கில் 80-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொரோனா நோய் தொற்று காரணமாக நீதிமன்றத்தில் நேரடி விசாரணை இல்லை. காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெற்றது. அதே வகையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என சிறப்பு நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பின் விவரம் மாலை 3 மணிக்கு வழங்கப்பட இருப்பதாக என்ஐஏ சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மாலை 3 மணிக்கு முழு தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் குற்றவாளிளான தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருசெல்வம், தங்கராசு, காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டாவது குற்றவாளியான தமிழரசனுக்கு 5 ஆண்டுகள் மற்றும் 3500 ரூபாய் அபராதமும் அறிவித்தார் சிறப்பு நீதிபதி செல்வநாதன். 2014 முதல் வழக்கு நடைபெற்று வருவதால் நீதிபதி அறிவித்த தண்டனை ஏழு ஆண்டுகளை இவர்கள் ஏககாலத்தில் அனுபவித்து உள்ளார்கள். எனவே இவர்கள் ஆறு பேரும் சிறை தண்டனை முடிந்து வெளியே வர உள்ளனர்.
இந்த தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு "தீவிரவாத கும்பலுக்கு இது ஒரு பாடம்" என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.