53 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சிறைத்துறை விதிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சிறை விதிகள் 1969ல் உருவாக்கப்பட்டது. 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விதிகளை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி 14 ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். தற்போது 10 ஆண்டு முடிந்து நன்னடத்தை கைதிகளை விடுவிக்கப்படுவர். போக்சோ போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்.
அரை நூற்றாண்டுகாலமாக சிறை அதிகாரிகள், காவலர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே சம்பளம், பதவி உயர்வு வேறுபாடு இருந்தது. தற்போது போலீசாருக்கு இணையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிறை தலைமை காவலர்களுக்கு உதவி சப் இன்ஸ்பெக்டருக்கு இணையாக ஒரு ஸ்டார், உதவி கண்காணிப்பாளருக்கு சப் இன்ஸ்பெக்டருக்கு இணையாக இரு ஸ்டார், துணை கண்காணிப்பாளருக்கு இன்ஸ்பெக்டருக்கு இணையாக 3 ஸ்டார் என வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தெரிவித்த புதுச்சேரி சிறைத்துறை ஐஜி ரவிதீப்சிங்சாகர், கைதிகளுக்கு புதுச்சேரியில் காலையில் கோதுமை தோசையும், காரைக்காலில் கஞ்சியும் வழங்கப்பட்டு வந்தது. இதை மாற்றி காலையில் இட்லி, உப்புமா, பொங்கல் வழங்கப்படும். 6 மாத தண்டனைக்கு பின் வெளிநாட்டு கைதிகள் அவர்கள் நாட்டு சிறைக்கு மாற்றப்படுவர். கைதிகள் கால்நடை வளர்ப்பு, விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.
சிறை ஊழியர்களுக்கு பணி நேரம் 8 மணி நேரமாக மாற்றப்பட்டு 3 ஷிப்ட் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்விற்கான ஆணையை வழங்கினார். இதற்காக சிறை ஊழியர்கள் ஐஜிக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.