மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்

மேகதாது

மேகதாதுவில் அணை கட்டினால் புதுவை, காரைக்கால் டெல்டா பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்.

  • Share this:
    காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    புதுச்சேரி சட்டப்பேரவையில் மேகதாது அணைக்க எதிராக தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்த அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அரசால் சுமார் 67 டிஎம்சி தண்ணீரை தடுத்து சேமிக்க நேரிடும் என்று குறிப்பிட்டார். அவ்வாறு காவிரி நீர் தடைபட்டால் கீழ்ப்பாசன பகுதிகளான தமிழகம் மற்றும் புதுவைக்கு வரவேண்டிய நீரில் பற்றாக்குறை ஏற்படும் என்றும் புதுவை, காரைக்கால் டெல்டா பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றார்.

    மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி ஏற்கனவே பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் புதுச்சேரி அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் 13வது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமான விவாதம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார். இந்த தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    மேகதாது அணையைக் கட்ட தமிழ்நாடு அரசும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, அங்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தினார். அதற்கு முன்னர் தமிழகத்தின் அனைத்து கட்சி குழு டெல்லி சென்று மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியது.

    இருப்பினும் கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றே தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மிக விரைவில் மேகதாதுவில் அணைக் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

    புதுச்சேரி சட்டப்பேரவை


    Must Read : அதிகரிக்கும் கொரோனா... கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

    இந்நிலையில், தமிழக அரசைப் போலவே புதுச்சேரி அரசும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: