புதுச்சேரியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அரசு சார்பு பள்ளி ஒன்றில் இரவு வாட்ச்மேனாக பணியாற்றுவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் முத்தாலு (60), கடந்த நவம்பர் மாதம் தனது வீட்டின் வெளியே பேத்திக்கு உணவு கொடுத்து கொண்டிருந்த போது பைக்கில் வந்தமர்ம நபர் விலாசம் கேட்பது போல் நடித்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் தங்க செயினை பறித்து சென்றார். அன்றைய தேதியில் புதுச்சேரி வில்லியனூர் பகுதி கூடப்பாக்கம் சாலையில் விலாசம் கேட்பது போல் நடித்து ஆசிரியை ஒருவரிடம் மர்ம நபர் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து மூதாட்டி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திலும், ஆசிரியை வில்லியனூர் காவல் நிலையத்திலும் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு தப்பி செல்லும் மர்ம நபர் கீழே விழுந்து தப்பி செல்வதும் அவரை ஆசிரியை மடக்கி பிடிக்க முயன்றதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது.
அதே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தான் ரெட்டியார்பாளையம் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து இரண்டு காவல் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை இரண்டு மாதங்களாக தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மூலகுளம் பகுதியில் ரெட்டியார்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: பெண்களை குறிவைத்து கொள்ளை.. துப்பாக்கியுடன் வட இந்திய கொள்ளையர்கள் கைது
சிசிடிவி கேமிராவில் பதிவான உருவம் கொண்டவர் போல் அவர் இருக்கவே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (43), என்பதும் லிங்கரெட்டி பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு அரசு சார்பு பள்ளியில் வாட்ச்மேனாகவும், பகுதி நேரமாக திலாசுப்பேட்டை பகுதியில் இறைச்சி கடையும் நடத்தி வந்துள்ளார்.
தனது கடனை சமாளிக்க திருட்டை தொடங்கியவர் புதுச்சேரி-தமிழக பகுதிகளில் பல இடங்களில் கை வரிசை காட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும் ஒரு போலி பதிவு எண்ணை பைக்கில் வைத்துள்ளார்.இதனால் போலீசாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். மேலும் திருடிய நகைகளை கொண்டு அவர் ஆடம்பரமாக வாழாமல் எளிமையாக இருந்துள்ளார். மனைவி மற்றும் இரு குழந்தைகள் பெயரில் வைப்பு நிதிகளை சேர்த்துள்ளார்.
மேலும் படிங்க: கருவுற்ற மகளிருக்கு பணி நியமனம் மறுக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது ஸ்டேட் வங்கி
மேலும் திருடிய நகைகளை கறிக்கடையில் இறைச்சி குப்பை பகுதியில் மூட்டையாக கட்டி வைத்துள்ளார்.இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிளான 23 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீ சார் அவரிடம் இருந்து இரு பைக்,போலி நம்பர் பிளேட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.