இனி கஞ்சா புகைத்தாலும் வழக்கு பதிவு - காவல்துறை ஐஜி உத்தரவு!
இனி கஞ்சா புகைத்தாலும் வழக்கு பதிவு - காவல்துறை ஐஜி உத்தரவு!
ஐஜி சந்திரன்
Puducherry | கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த இனி கஞ்சாவை குறைந்த அளவே வைத்திருந்தாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஜி சந்திரன் தெரிவித்துள்ளார்.
கஞ்சா விற்பனை அசுர வளர்ச்சி பெற்றுள்ளதால் இனி கஞ்சா புகைத்தாலும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று புதுச்சேரி காவல்துறை ஐஜி சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஐஜி சந்திரன், புதுச்சேரிக்கு கஞ்சா அதிகளவில் ரயில்கள் மூலம் வருவதால் வெளிமாநில ரயில்கள் வரும்போது சோதனையை அதிகப்படுத்தவுள்ளோம். போதைப்பொருள் தடுப்புக்காக தனியாக எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
மேலும், கஞ்சா வழக்குகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால் பல நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். கடந்த 2016ல் 3 வழக்குகளில் கஞ்சா வழக்குக்காக கைது செய்யப்பட்டு 550 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இது கடந்த 2020ல் 36 வழக்குகளாகி 107 கிலோ பறிமுதல் செய்தோம். கடந்த 2021ல் 72 வழக்குகள் பதிவாகி 91 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு 129 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.
நடப்பாண்டில் இதுவரை 20 வழக்குகள் போடப்பட்டு 9 கிலோ பறிமுதல் செய்துள்ளோம். கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த இனி கஞ்சாவை குறைந்த அளவே வைத்திருந்தாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மற்றும் கல்லூரி செல்வோராக இருந்தாலும் இந்த நடவடிக்கை உறுதியாக இருக்கும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணித்து உரையாடுவது அவசியம். கஞ்சா இருந்து கைதானால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குதான் அனுப்ப வேண்டியதாக இருக்கும். எதிர்காலம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால் குழந்தைகள், அவர்களின் நண்பர்களை கண்காணிப்பது பெற்றோர் கடமை என்றும் ஐஜி சந்திரன் தெரிவித்தார்.
கஞ்சா பரவலாக கிடைக்கும் பகுதிகளாக 20 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த போதைப்பொருள் தடுப்பு அமைப்பினை அங்கு முதல்கட்டமாக உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
கஞ்சா, போதைப்பொருள் உள்ளிட்ட எப்பொருள்கள் விற்பனை, அது தொடர்பான பொது இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்டவற்றை புகார் செய்ய 112 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப்பில் புகார் தர 94892 05039 என்ற எண்ணை பயன்படுத்தலாம் என ஐஜி சந்திரன் குறிப்பிட்டார்.
ரசாயனம் சார்ந்த போதைப்பொருள்கள் பயன்பாடும் உள்ளது. அது சார்ந்த அனைத்து போதைப்பொருட்கள் பயன்பாட்டையும் தடுக்கவுள்ளோம். சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். புகார் பதிவு செய்யாவிடின் உட்பட புகார் தர 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
சைபர் க்ரைம் குற்றங்களைத்தடுக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையில் காலியாக உள்ள போலீஸ், எஸ்ஐ பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றும் ஐஜி சந்திரன்கூறினார்.
கஞ்சா விற்பனை செய்த 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இனி புதுச்சேரியில் கையில் கஞ்சா வைத்திருந்தாலே வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கையில் ஒரு பொட்டலம் வைத்திருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஐஜி சந்திரன் எச்சரித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.