புதுச்சேரியில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் மேலும் சென்னையைச் சேர்ந்த 4 பேரை கைது செய்த புதுச்சேரி போலீசார் அவர்களிடமிருந்து 2.42 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு மற்றும் பணம் தயாரிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் கடந்த 7ஆம் தேதி உருளையன்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் மது வாங்கும் போது 500 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை செய்ததில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் முக்கிய குற்றவாளியான மோகன் கமலை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதுச்சேரி போலீஸார் தனிப்படை அமைத்து சென்னையில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ரகு ராயபுரம் பகுதியை சேர்ந்த நாகூர் மீரான், தமின் அன்சாரி, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரன் என்கிற சரண்ராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 500 ரூபாய் நோட்டுக்கள் 2.42 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளையும் அவர்களிடமிருந்து கள்ள நோட்டுகளை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட 4 பேரையும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து உருளையன்பேட்டை ஆய்வாளர் பாபுஜி கூறும்போது, கள்ளநோட்டு வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த குற்றவாளிகள் சென்னையில் உள்ள குற்றவாளிகளிடம் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்து புதுச்சேரியில் புழக்கத்தில் விட்டது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் சில குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளநோட்டு விவகாரத்தில் இதுவரை புதுச்சேரியில் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான தமீன் அன்சாரி(22) சென்னை IITயில் படித்து சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுகிறார். இவர்கள் ஓராண்டாக தமிழகம் - புதுச்சேரியில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளனர். மேலும் இதன் பின் புலங்களை குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.