• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது 50 நாட்கள் குளறுபடி: 27-ம் தேதி அமைச்சரவை பதவியேற்பு

புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது 50 நாட்கள் குளறுபடி: 27-ம் தேதி அமைச்சரவை பதவியேற்பு

ரங்கசாமி

ரங்கசாமி

புதுச்சேரியில் 27-ம் தேதி அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.

  • Share this:
    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை, வரும் 27ம் தேதி பதவியேற்கவுள்ளது. இதன் மூலம் சுமார் 50 நாட்களாக நிலவிய இழுபறியை முதலமைச்சர் ரங்கசாமி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவு மே 2ம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 30 இடங்களில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், அவரது கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 6 இடங்களிலும் வென்றன. இதேபோல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 2 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. இவர்களைத் தவிர சுயேச்சை வேட்பாளர்கள் 6 பேர் வென்றனர். அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னணி பெற்றதை அடுத்து, கடந்த மே 7ம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார்.

    தங்கள் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவியையும், இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியையும் கேட்டு ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. ஆனால், அவர்களின் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அந்தக் கோரிக்கையை நிராகரித்தார் ரங்கசாமி.

    கொரோனா தொற்றால் மருத்துவமனையில் ரங்கசாமி அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மூன்று பேரை நியமன எம்.எல்.ஏக்களாக பா.ஜ.க நியமித்ததுடன், மூன்று சுயேச்சைகளையும் வளைத்து தன் எம்.எல்.ஏ-க்கள் பலத்தை 12-ஆக உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக சபாநாயகர் பதவியும், இரண்டு அமைச்சர் பதவிகளையும் வழங்க ரங்கசாமி ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 16ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். எனினும், 5 அமைச்சரவை பதவிகளில் இரண்டை பாஜகவுக்கு வழங்க ரங்கசாமி ஒப்புக் கொண்டார். பாஜகவின் அமைச்சர்கள் பட்டியலில் நமச்சிவாயத்தின் பெயர் இடம்பெற்ற நிலையில், மற்றொரு அமைச்சர் பதவிக்கு, ஜான்குமார் மற்றும் சாய் சரவணன் ஆகியோர் இடையே போட்டி நிலவியது.

    ஜான் குமாரின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டு சிலர் புதுச்சேரி பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரி விவகாரம் டெல்லி வரை எதிரொலித்தது.

    சுமார் 50 நாட்களாக நீடித்த புதுச்சேரி அமைச்சரவை இழுபறிக்கு, முதலமைச்சர் ரங்கசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் அமைச்சரவை பட்டியலை அளித்துள்ளார்.

    இதற்கிடையே, முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகியோர் சந்தித்தனர். இருவரது பெயரும் அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சூழலில், முதலமைச்சரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். வரும் 27ம் தேதி நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் பதவியேற்றுக் கொள்வதாகவும் முதல்வரிடம் தெரிவித்தனர்.

    இதனிடையே, வரும் 27ம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதலமைச்சர் ரங்கசாமி வழங்கிய அமைச்சரவை பட்டியல், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, முறைப்படி ஒப்புதல் பெறப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக 27ம் தேதி புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழா துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: