Puducherry Lockdown | புதுச்சேரியில் மே 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி

கொரோனா பரவல் அதிகரித்தை அடுத்து புதுச்சேரியில் மே 10-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்..

  • Share this:
    புதுச்சேரியில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு இன்று (மே 3) வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் செயல்பாட்டில் உள்ளது. தொடர்ந்து, அத்தியவசியக் கடைகள், சேவை நிறுவனங்கள் மட்டும் இரவு 10 மணி வரை இயங்கலாம். பிற கடைகள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

    குறிப்பாக மளிகை கடை, காய்கறி கடை, உணவகங்கள், பால், இறைச்சி, மீன், கால்நடை தீவனம் ஆகிய கடைகள் இயங்கலாம். பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மால்கள் இயங்க அனுமதியில்லை. உணவகங்களில் பார்சல் உணவு மற்றும் வீட்டுக்கு சென்று உணவு விநியோகிப்பது, ஓட்டல் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் அறைக்கு சென்று மட்டும் உணவு விநியோகிப்பதற்கு அனுமதிக்கப்படும்.

    உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. தேனீர் கடைகளில் அமர்ந்து தேனீர் குடிக்க அனுமதியில்லை. மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ ஆய்வகங்கள், பாராமெடிக்கல்ஸ், கண்ணாடிக்கடைகள், மருந்து உபகரணங்கள், செய்தித்தாள், அவசர ஊர்தி மற்றும் மருத்துவ அவசர கால சேவைகள் அனுமதிக்கப்படும். அனைத்து மத வழிப்பாட்டு தலங்களில் பொது வழிபாடுக்கு அனுமதி கிடையாது.

    மதசபைக் கூட்டம், திருவிழாக்களுக்கு அனுமதியில்லை. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்கள், இறுதி சடங்குகளில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கலாம். பெட்ரோல் பங்க், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஏடிஎம்கள், தொலைதொடர்பு, இணையதள சேவை, ஒளிபரப்பு, கேபிள் சேவை, ஊடகம், தகவல் தொழில்நுட்ப சேவை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில்புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கர்ப்பினிப்பெண்களுக்கான கொரோனா பரிசோதனை முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை புதுச்சேரி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கிறது, அதை காரணமாக வைத்து பொதுமக்கள் தேவை இல்லாமல் சாலையில் வர வேண்டாம் என கூறிய அவர் மீறினால் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்,

    மேலும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறிய அவர் தற்போது உள்ள கட்டுபாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், அடுத்த திங்கள்கிழமை வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார், அதன் படி வரும் திங்கட்கிழமை வரை அத்தியாவசிய கடைகளான காய்கறி கடைகள், மளிகை கடைகள், பாலகங்கள் மற்றும் மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடி இருக்க வேண்டும் என்று கூறிய தமிழிசை, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் அத்தியாவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற அரசியல் கட்சினர் இன்று மாலை தன்னை சந்திக்க துணைநிலை ஆளுநர் மாளிகை வர உள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தகவல் தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published: