புதுச்சேரியில் 42 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறப்பு - கடை முன்பு குவிந்த மதுப்பிரியர்கள்

புதுச்சேரி மதுபானக் கடை

புதுச்சேரியில் 42 நாட்களுக்குப் பிறகு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

    கொரோனா காரணமாக புதுச்சேரியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மார்ச் 22ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 24ஆம் தேதி கடைகள் திறக்கப்பட்டன. அவற்றுக்கு பல மடங்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. அப்போது திறக்கப்பட்ட மதுபானக் கடைகள் மார்ச் 31-ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருந்தது. பின்னர், பொதுத் தேர்தல் காரணமாக மதுபான கடைகள் மீண்டும் மூடப்பட்டன.

    தேர்தலுக்குப் பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மதுபான கடைகள் மூடப்பட்டன. 42 நாட்களாக மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் மதுபான கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக் கடைகளை திறக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து 42 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கைகளை பின்பற்ற கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஏற்ப கடைகள் முன் தடுப்பு கட்டைகள், தனி மனித இடைவெளிக்காக வட்டம் போடப்பட்டுள்ளது. இவற்றை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் நேரில் ஆய்வு செய்து முகக் கவசம் அணியாதவர்களுக்கு மது வழங்க கூடாது, மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்பதால் கூட்டமாக வர வேண்டாம் என அறிவுறுத்தினார்.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புதுச்சேரியில் 384 மதுபான கடைகள், 5 தனியார் மதுபான தொழிற்சாலைகள், 85 சாராயக்கடைகள், 86 கள்ளுக்கடைகள், ஒரு அரசு சாராய டிசாலை உள்ளன. ஆண்டிற்கு 900 கோடி ரூபாய் கலால் துறை மூலம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: