• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் போதுமான மருந்துகள் கையிருப்புள்ளது - தமிழிசை தகவல்

புதுச்சேரியில் போதுமான மருந்துகள் கையிருப்புள்ளது - தமிழிசை தகவல்

கொரோனா தடுப்பூசி போடும் மையத்தில் தமிழிசை- புதுச்சேரி

கொரோனா தடுப்பூசி போடும் மையத்தில் தமிழிசை- புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் உட்பட அனைத்து உயிர்காக்கும் மருந்துகள் போதுமானதாக உள்ளது என்று துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார்.

  • Share this:
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் துணை நிலை ஆளுநர் உத்தரவின்படி சுகாதரத்துறை சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றது. இதன்படி  நேரு வீதியில் உள்ள பெரிய (குபேர்) மார்க்கெட்டில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை  துணை நிலை ஆளுநர் தமிழிசை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,” புதுச்சேரி மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான வகையில் கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தொடர்ந்து பொது முடக்கம் போடக்கூடிய அளவில் இல்லை. இருப்பினும் நன்றாக கண்காணித்து வருகின்றோம். தேவைப்படின் பகுதி முடக்கம் போடவும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் தொற்று பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.  உயிர்காக்கும் மருந்துகள் இல்லை என வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், “ புதுச்சேரியில் இன்று முதல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி போடுவதுடன், பரிசோதனையும் செய்ய உள்ளோம். முதலாவதாக மார்க்கெட்டில் அதிக மக்கள் கூடியதால் பரிசோதனை, தடுப்பூசி போடும் பணியை துவக்கிவிட்டோம். அதிக கொரோனா தொற்று இருக்கும் இடங்களில் அப்பகுதியை தனிமைப்படுத்த முடிவு எடுத்துள்ளோம்.

தடுப்பூசி பற்றி கவலை வேண்டாம். நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. பலரும் சந்தேகங்களும் கேட்டனர். தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இல்லை. உயிருக்கு ஆபத்து இல்லை. அரசு ஏற்படுத்தியுள்ள வசதிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசிடம் படுக்கை வசதிகள் போதுமான அளவு உள்ளது. தனியாரிடத்திலும் தயார் செய்து உள்ளோம்” என்றார்.

அதன் பிறகு, “வீட்டில் இருப்பவர்களுக்கு வசதி இல்லாவிட்டால், கொரோனா பாதுகாப்பு மையம் திறக்க உள்ளோம். 104 என்ற எண்ணில் 24 மணி நேரமும் கொரோனா குறித்த சந்தேகமும் கேட்கலாம். வெளிப்புற சிகிச்சை பிரிவில் அதிக கூட்டம் கூடாமல் இருக்க, டெலி மெடிசின் வசதியில் ஆலோசனை தரப்படவுள்ளது” என்றும் தமிழிசை தெரிவித்தார்.

இதனிடையே புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 663 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 497 நபர்கள், காரைக்காலில் 80 நபர்கள், ஏனாமில் 35 நபர்கள், மாஹேவில் 51 நபர்கள் என மொத்தம் 663 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க... மத்திய அரசின் அறிவுறுத்தலால் ரெம்டெசிவிர் மருந்தின் விலை பெருமளவு குறைப்பு

தற்போது 4,468 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 42,595 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை புதுச்சேரியில் 47,771 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: