• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மூன்றாவது அலை வேண்டாம்: கொரோனாவுக்கு சிலை வைக்கிறேன் - தமிழிசை சௌந்தர்ராஜன் உருக்கம்

மூன்றாவது அலை வேண்டாம்: கொரோனாவுக்கு சிலை வைக்கிறேன் - தமிழிசை சௌந்தர்ராஜன் உருக்கம்

தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழிசை சௌந்தர்ராஜன்

மூன்றாவது அலை வரவேண்டாம். கொரோனாவுக்கு சிலை வைக்கிறேன் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரியில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சுகாதாரத்துறையின் பங்களிப்பு போற்றத்தக்க வகையில் அமைந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்போடு கூடிய சேவைகள் இதற்கு அடிப்படையாக அமைந்தன. பீச் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மருத்தவர்கள் உட்பட மருத்துவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து வெ.வெங்கடசுப்பா ரெட்டியார் அறக்கட்டளை மூலமாக ரூ. 1.05 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், ’ரோட்டரி சங்கத்திற்கும், சிறப்பாகப் பணியாற்றி விருதுகள் பெறும் மருத்துவர்களுக்கும்  பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் பணியாற்றுவது சவாலான ஒன்று. மருத்துவர்கள் சிறப்பாகப் பணியாற்றி தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர உதவி புரிந்தார்கள். இந்த காரணத்திற்காகவே உலக மருத்துவர்கள் தினத்தை புதுச்சேரியில் கொண்டாடினேன் என்றார்.

மருத்துவர்களின் நலம் குறித்து அடிக்கடி அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்தேன். மற்ற மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு இருந்தபோது மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து இருக்கிறோம். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டது. நம்மைச் சுற்றி உள்ள உறவுகள், நட்பு, நேரம், பண்பாடு ஆகியவற்றை புரிந்து கொள்வதற்கான சில படிப்பினைகளை கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

நம்முடைய முன்னோர்கள் பண்பாட்டு பழக்க-வழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் விஞ்ஞானத்தைப் புகுத்தி வைத்திருக்கிறார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார். உயிர்க்காற்று திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அதற்காக பெறப்பட்ட உதவிகளுக்காக ரேட்டரி சங்கத்தின் சேவையை  பாராட்டுகிறேன். போலியோ சொட்டு மருந்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றதில் ரோட்டரி சங்கத்திற்கு சிறப்பான பங்கு உண்டு. அதைப்போலவே கொரோனா தடுப்பூசியையும் மக்களுக்கு கொண்டு செல்ல ரோட்டரி சங்கம் உழைக்க வேண்டும்.

அப்போதுதான் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் 100% தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறமுடியும் என கூறிய தமிழிசை, அதற்கு ரோட்டரி சங்கத்தின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் என்றார். மருத்துவர்களால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிகிறது. இருப்பினும் எச்சரிக்கை இருக்க வேண்டும். கொரோனா 3 வது அலை வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எந்த அலையும் வேண்டாம். கொரோனாவுக்கு சிலை வைத்து விடுகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா அலையே வேண்டாம் என தினசரி கடவுளை வேண்டுகிறேன் என தமிழிசை உருக்கமாக பேசினார்..
நிகழ்ச்சியில் நியமன சட்டமன்ற உறுப்பினர் அஷோக் பாபு, மாநில சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு, ரோட்டரி மாவட்ட ஆளுநர்  பாலாஜி, பீச் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர்  புருஷேத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: