ஒன்றியம் என்று குறிப்பிட்டது புதுச்சேரியை: மத்திய அரசு அல்ல- தமிழிசை சௌந்தர்ராஜன் தரப்பில் விளக்கம்

தமிழிசை

புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஒன்றியம் என்று குறிப்பிட்டது புதுச்சேரியைத் தான் என்று துணைநிலை ஆளுநர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

 • Share this:
  தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. அதனையடுத்து, மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பதவியேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டுவருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே அழைத்துவருகின்றன. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் மத்திய அரசு, ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டுவருகிறது.

  தி.மு.கவின் கூட்டணிக் கட்சியினரும் ஒன்றிய அரசு என்றே அழைக்கின்றனர். ஆனால், தி.மு.கவின் ஒன்றிய அரசு என்ற சொற்பிரயோகத்துக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மத்திய அரசு என்று அழைக்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்திவருகிறது. இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த அமைச்சரவைப் பதவியேற்றது. அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது, இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சராக பதவியேற்கிறேன் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

  இந்தநிலையில், மத்திய அரசின் பிரதிநிதியான துணைநிலை ஆளுநரும், பா.ஜ.க அமைச்சர்களும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டனர் என்று செய்திகள் வந்தது. அவர்கள் உறுதிமொழி எடுக்கும் வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டது. இந்தநிலையில், ஒன்றியம் என்ற வார்த்தைக்கு புதுச்சேரி ஆளுநர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடவில்லை என்று துணை நிலை ஆளுநர் செயலகம் விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஒன்றியம் எனும் வார்த்தை இடம் பெற்றிருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது குறித்து விளக்கம் அளித்துள்ள துணை நிலை ஆளுநர் செயலகம், பதவி பிரமாணத்தில் "இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு" என்பது புதுச்சேரி தமிழறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது எனவும், இங்கு ஒன்றியம் எனக் குறிப்பிடுவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை, ஒன்றிய அரசு என ஆளுநர் கூறியதாக திரித்து கூறுவது கண்டிக்கத்தக்கது எனவும், சில தேவையற்ற சலசலப்புகளால் இந்திய இறையாண்மையை குலைக்க முயல வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: