Home /News /national /

நீட் மற்றும் க்யூட்டை மியூட் செய்ய வேண்டும் - கி.வீரமணி பேச்சு

நீட் மற்றும் க்யூட்டை மியூட் செய்ய வேண்டும் - கி.வீரமணி பேச்சு

வீரமணி

வீரமணி

Puducherry | புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு மற்றும் தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்பு பொதுக்கூட்டம் சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்றது.

  • News18
  • Last Updated :
நீட் மற்றும் க்யூட்டை மியூட் செய்ய வேண்டும்  என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு மற்றும் தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்பு பொதுக்கூட்டம் சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்றது.

கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில திராவிட கழகத் தலைவர் சிவ‌.வீரமணி தலைமை தாங்க சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது, புதுச்சேரியில் ஆட்சி நடக்கிறதா? அல்லது காட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை,  அரசியல் பொம்மலாட்டம் நடக்கிறது. இந்த பொம்மலாட்டத்தில் நூல்களெல்லாம் டெல்லியில் உள்ளது. வெறும் பொம்மையாக மட்டுமே  ரங்கசாமி உள்ளார் என்று குறிப்பிட்டார்.

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களாக வரவேண்டுமென்றால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்று பேசிய அவர் மோடி ஆட்சியில் டீ கூட 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

வாக்குறுதி அளிப்பதில்  பிரதமர் மோடி வழியையே புதுச்சேரியில் ரங்கசாமி பின்பற்றி வருவதாக குற்றம் சாட்டிய வீரமணி, வேலை வாய்ப்பு இல்லை, மாநில வளர்ச்சி இல்லை,என்று குறிப்பிட்ட அவர் முதல்வர் என்பது வேறு  முதல்வராக அறிவிக்கப்பட்டவர் என்பது வேறு என்பதற்கு உதாரணமாக ரங்கசாமி நடந்து கொள்வதாக கூறினார்.

தமிழகத்தில் உள்ள ஆளுநர் நடவடிக்கையால்  11 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக  குற்றம் சாட்டிய வீரமணி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பற்றியும், தொழில் முன்னேற்றம் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம், இது எல்லாம் மோடி வித்தை என்றார்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவதை விட இந்தி கட்டாயம், சமஸ்கிருதம் கட்டாயம், என்பது தான் மோடி அரசின் கொள்கையாக உள்ளது, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை என்று குறிப்பிட்ட அவர், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என்று குறிப்பிட்ட வீரமணி, பிரிவினை என்பது ஆரியம், பேதங்களை அகற்றுவது என்பது திராவிடம் என்றார்.
அனைவரும்  படிக்கக் கூடாது என்பதற்காக தான் மத்திய அரசு நீட்தேர்வு கொண்டுவந்துள்ளது கரையான் புற்றில் கருநாகம் புகுந்தது போல் மத்திய பல்கலைக் கழகங்களுக்கு கியூட் என்ற நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

அரசியல் சட்டத்தில் அறிவிக்காத எமர்ஜென்சி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும், சனநாயகம் சமதர்மம், சோசலிசம், உள்ளிட்ட ஐந்து அம்சங்கள் மோடி ஆட்சியில் மறுக்கப்பட்டு உள்ளதாகவும், நீட் தேர்வு என்பது அரசியல் சட்டத்திற்க்கு விரோதமானது என்று  குறிப்பிட்டார்.

தேசிய கல்வி கொள்கை படி மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் மதிப்பெண்களுக்கு மதிப்பில்லாமல் செய்வதுதான் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் என்று குற்றம்சாட்டிய அவர் ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் தான் தற்போது உள்ள தேசிய கல்வி திட்டம். எனவே தேசத்திற்கு விரோதமான நீட் மற்றும் க்யூட்டை மியூட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Also read... சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் என்னென்ன?- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

புதுவையிலுள்ள காவி ஆட்சியை மாற்ற வேண்டுமென்றால் எதிர்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்றும் அப்போதுதான் நமது உரிமையை வென்றெடுக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர் திராவிட கழகத்தினர், பயணத்திற்கு மக்கள் ஆதரவு உள்ளது இந்த பயணம் வெற்றி அடையும் என்றும் புதுச்சேரி என்பது புரட்சி மண், பகுத்தறிவு மண், எனவே இங்கிருந்து காவி  ஆட்சியை உடனடியாக விரட்ட வேண்டும் என்று திராவிட கழகத் தலைவர் வீரமணி தனது உரையின்போது பேசினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், மற்றும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி