புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. முக்கிய இலாகாகளை கைப்பற்றிய பாஜக

முதல்வர் ரங்கசாமி - ஆளுநர் தமிழிசை

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது முதல் ரங்கசாமி அக்கட்சியுடன் போராட வேண்டிய சூழலில்தான் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது.

  • Share this:
புதுச்சேரியில் முதல்வர் மற்றும்  அமைச்சர்களுக்கு  துறைகளை ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வருவாய், கலால், சுகாதாரத்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நமச்சிவாயத்துக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி  கடந்த மே 2ம் தேதி ஆட்சியமைத்தது. அதையடுத்து அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்து பதவியேற்பதற்கு ஐம்பது நாட்களானது. பதவியேற்றும் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் தமிழிசையிடம் முதல்வர் ரங்கசாமி தந்தார். அதையடுத்து ஆளுநர் ஒப்புதல் தந்து தலைமைச்செயலருக்கு அனுப்பினார். அதையடுத்து மாலையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.கூட்டணிக்கட்சியான பாஜக முதலில் துணை முதல்வர் பதவி கோரியது. ஆனால் முதல்வர் அதற்கு ஒப்புதல் தரவில்லை.

இதன் பின்னர் முக்கிய துறைகளை கோரியது. எனினும் வழக்கமாக முதல்வர் வசம் இருக்கும் உள்துறையை பாஜக கோரியது. அதை இம்முறை பாஜகவுக்கு முதல்வர் தந்துள்ளார். தற்போது பாஜகவைச்சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை தரப்பட்டது. இருப்பினும் முக்கியத்துறைகளை என்.ஆர்.காங்கிரஸ் வசம் உள்ளது.

அமைச்சர்களின்துறைகள் விவரம்

முதல்வர் ரங்கசாமிக்கு கூட்டுறவு, வருவாய், கலால், பொது நிர்வாகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், இந்து சமய நிறுவனங்கள், வக்ப் வாரியம், உள்ளாட்சித்துறை, நகர மற்றும் கிராம ஒருங்கமைப்பு, போர்ட், அறிவியல் தொழில்நுட்பம்மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பிற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது..

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு உள்துறை, மின்துறை, தொழில்கள் மற்றும் வணிகம், கல்வி (பள்ளிக்கல்வி, உயர்கல்வி), விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், முன்னாள் படைவீரர் நலம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து, மீன்வளம், சட்டம், தகவல் தொழில்நுட்பம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறை அமைச்சர்தேனீ ஜெயக்குமாருக்கு வேளாண்துறை, கால்நடை, வனத்துறை, சமூக நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் ஆகியவை அளிக்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு ஆதிதிராவிடர் நலம், போக்குவரத்து, ஹவுசிங், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.

குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர்சாய் சரவணக்குமாருக்கு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை, சிறுபான்மை விவகாரங்கள், தீயணைப்பு ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது முதல் ரங்கசாமி அக்கட்சியுடன் போராட வேண்டிய சூழலில்தான் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் ஆரம்பித்த போராட்டம் எத்தனை பேருக்கு அமைச்சர் கொடுப்பது, சபாநாயகர் பதவி கொடுப்பது என்பது வரை நீடித்தது. அடுத்ததாக எந்தெந்த  இலாக்காக்கள் அமைச்சர்களுக்கு ஒதுக்குவது என்பது வரை நீடித்து வந்தது.

தற்பொழுது அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்பட்டாலும் அடுத்து புதுச்சேரியில் காலியாகும் ராஜ்யசபா எம்பி பதவியை பெறுவதில் பாஜக- என்ஆர் காங்கிரஸ் இடையே மீண்டும் போராட்டம் தொடங்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: