• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் தலைமையை எதிர்த்து அமைச்சர் பதவி கேட்டு எம்.எல்.ஏ தொடர் போராட்டம் - திணறும் பா.ஜ.க

புதுச்சேரியில் தலைமையை எதிர்த்து அமைச்சர் பதவி கேட்டு எம்.எல்.ஏ தொடர் போராட்டம் - திணறும் பா.ஜ.க

போராட்டத்தில் பா.ஜ.கவினர்

போராட்டத்தில் பா.ஜ.கவினர்

புதுச்சேரியில் அமைச்சர் பதவிகேட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமாரின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Share this:
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்று அன்றைய தினமே சட்டமன்ற உறுப்பினர்கள், நியமனம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் மிக பெரிய இழுபறிக்கு பின் பா.ஜ.கவிற்கு சபாநாயகர் மற்றும் 2அமைச்சர் பதவியை என்..ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஒதுக்கினார்.

இதனை அடுத்து சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு சபாநாயகராக பதவி ஏற்றுக்கொண்டார். சபாநாயகர் பதவிக்கு பெயரை பரிந்துரை செய்த அன்று அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த ஜான்குமாருக்கு பதிலாக ஊசுடு தொகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவான சாய் சரவணன் அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவியது.

இதனால்  நெல்லிதோப்பு தொகுதி எம்எல்ஏவான ஜான்குமார், காமராஜ் நகர் தொகுதியின் எம்எல்ஏவான அவரது மகன் விவியன் ரிச்சர்டு ஆகியோர் டெல்லி விரைந்தனர். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் கிறிஸ்துவராக தங்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க மேலிட பொறுப்பாளர்களை சந்தித்து காத்திருக்கிறார்கள்.
பாஜகவின் மாநில தலைமையின் கையை இவ்விஷயம் மீறிவிட்டது. இதற்கு உதாரணம் பாஜக அலுவலகத்தில் ஜான்குமார் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது. அடுத்ததாக சில இடங்களில் பாஜகவை கண்டித்து சாலை மறியல் போராட்டம். அடுத்ததாக பாஜக தலைமையை கண்டிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து பாஜக கொடியுடன் காமராஜ் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய பாஜக தலைமை சிறுபான்மையினரான ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பாஜக தலைமை அறிவித்தபடி ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

புதுச்சேரியில் அமைச்சர் பட்டியலை இன்று துணைநிலை ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் ஜான் குமார் ஆதரவாளர்கள் அமைச்சர் பதவி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பது கட்சி விரோத செயல். நியாயப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எல்லாம் கையை மீறி போய் விட்டது என பாஜகவின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நிர்வாகி தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் வந்தேறிகளுக்கு பதவி கொடுத்ததால் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விட்டது. அந்த நிலைக்கு தற்போது பாஜக தள்ளப்பட்டுள்ளது. பாஜகவில் பல ஆண்டுகளாய் அடி உதைப்பட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இதுவும் ஒரு ஜனநாயகமில்லாத கட்சி ஆகிவிட்டது என சிலர் பாஜக அலுவலகத்தில் குரல் எழுப்ப துவங்கி விட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேசிய அளவில் பல மாநிலங்களில் பலரது கண்ணில் விரல் விட்டு ஆட்டும் பாஜக தலைமைக்கு புதுச்சேரி விவகாரம் பெரும் தலைவலியாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: