புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்து உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடை ரத்து செய்ததற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சபாநாயகர் தலைமையில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளித்து தேர்தலை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். தீர்மானங்களை துணைநிலை ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். அதே வேளையில் எதிர்கட்சிகளான காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினர் இடஒதுக்கீடை ரத்து செய்து தேர்தலை நடத்துவதை கண்டித்து இன்று பந்த் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர்.
இதன்படி, இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. அதிகாலை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேநேரத்தில் தமிழகம்-புதுச்சேரி அரசு பேருந்துகள் இயங்கின. தமிழகத்தில் இருந்து புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பேருந்துகளும், புதுச்சேரியிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கின.
தனியார் பேருந்துகள் இயக்கப் படாததால் அரசு பேருந்துகளில் கூட்டம் இருந்தது. வெளியூர் செல்லும் பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு பிரிவு ஆட்டோ, டெம்போக்கள் இயங்கியன. பள்ளி, கல்லூரிகள் இயங்கியது. தனியார் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை இயக்கினர்.
பந்த் காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அரசு பள்ளிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கின. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட்டில் காய்கறி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மீன் மார்க்கெட்டும் இயங்கியது. சேதராப்பட்டு, தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் வழக்கம்போல இயங்கின.
பந்த் போராட்டம் அறிவித்த காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, புதியநீதிக்கட்சி மற்றும் இயக்கத்தினர் காமராஜர் சிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக வந்து கடைகளை அடைக்கும்படி வணிகர்களிடம் கோரிக்கை வைத்தனர். பந்த் போராட்டத்தையொட்டி முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. முதல் கட்டமாக புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளின் 2 தலைவர்கள், 75 கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடக்கிறது. இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மனு தாக்கல் கடைசி தேதி வரும் 18ஆம் தேதி. 20 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 22ஆம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்.
Must Read : கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு: நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சாட்டை முருகன் மீண்டும் கைது
நவம்பர் 2ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியை அறிய மொபைல் செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. https://sec.py.gov.in என்ற இணையத்தில் இருந்து myvotefor civicelection என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local Body Election 2021, News On Instagram, Protest, Puducherry