புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் சேர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை முதல்வராக்க முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தலைமையில் கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்துகொண்டு சட்டமன்றக் கட்சித் தலைவராக ரங்கசாமியை தேர்வு செய்து அதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
இதனிடையே, பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு அமைவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரண்டு கட்சியினரும் ஆலோசனை செய்த பின்னர், துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்திக்க என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சென்றார். ரங்கசாமியை தொடர்ந்து பாஜக மேலிட தலைவர்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை வந்தனர்.
தொடர்ந்து, புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ரங்கசாமி ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினார். அதில், என்.ஆர்.காங் உறுப்பினர்கள் 10 பேர் மற்றும் பாஜக உறுப்பினர்கள் 6 ஆகிய 16 பேரும் புதிய ஆட்சி அமைய, ரங்கசாமியை முதல்வராக தேர்வு செய்து கையெழுத்திட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய அரசு பதவி ஏற்க கேட்கும் தேதியில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்றார். நல்ல நேரம் பார்த்து சொல்வதாக ரங்கசாமி கூறியுள்ளார். அவர் சொல்லும் தேதியில் பதவி பிரமாணம் செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து, பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, ஏகமனதாக ரங்கசாமியை முதல்வராக தேர்வு செய்துள்ளோம். அவரது தலைமையில் தான் தேர்தலை சந்தித்தோம். ரங்கசாமியால் தான் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். அவர் தான் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர். முதல்வர் பதவிக்கு பாஜக போட்டியில்லை.
புதுச்சேரியில் முதல்முறையாக அமைச்சரவையில் பாஜக இடம் பெறுகிறது. 2016ல் ஒரு இடம் கூட பாஜக பெறவில்லை. பாஜகவை கேலி செய்த காங்கிரசுக்கு இரு இடம் மட்டுமே மக்கள் அளித்துள்ளனர். பூஜ்ஜியத்தில் இருந்த பாஜக இன்று அமைச்சரவையில் இடம் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளது. புதுச்சேரியை மாதிரி மாநிலமாக மாற்றுவோம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி கூறும்போது, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்னை தலைவராக தேர்வு செய்ததற்கு எம்எல்ஏக்களுக்கு நன்றி. முதல்வர் பதவி ஏற்பு விழா உரிய நேரத்தில் நடக்கும் என்றார்.
இதனிடையே, வரும் 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.