புதுச்சேரி அரசியலில் சுவாரஸ்யம்... தேர்தலில் களம் காணும் மாமன்-மருமகன், தந்தை - மகன், அண்ணன் - தம்பி

புதுச்சேரி

அதிமுகவில் 3வது முறையாக அண்ணன்-தம்பி இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

  • Share this:
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக இடம் பெற்றுள்ளது. என்ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதியில் போட்டியிடுகிறார்.இவர் 8 வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 15 ம் தேதி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று ஏனாம் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மாமன் - மருமகன்

ரங்கசாமியின் அண்ணன் ஆதிகேசவனின் மகள் வசந்தியை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் திருமணம் செய்துள்ளார். இதனால் ரங்கசாமியின் மருமகனாக நமச்சிவாயம் உள்ளார். அவர் பா.ஜனதா சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே இவர் உழவர்கரை தொகுதி,வி ல்லியனூர் இருமுறை என 3 முறை போட்டியிட்டுள்ளார்.தற்போது 4 வது முறையாக போட்டியிடுகிறார்.

தந்தை-மகன்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட தந்தை, மகன் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. காமராஜர் நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார் மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரின் மகன் விவியன் ரிச்சர்ட்ஸ் நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நெல்லித்தோப்பு தொகுதியில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஜான்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவரின் சொந்த தொகுதியான நெல்லித்தோப்பை அப்போதைய முதல்வர் நாராயணசாமிக்காக அவர் விட்டுக்கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து பாஜகவில் இணைந்த ஜான்குமார் தனது மகனை சொந்த தொகுதியில் களம் இறக்கியுள்ளார். அவர் முதல் முறையாக போட்டியிடுகிறார்.முதல்வர் தொகுதி என்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற இத்தொகுதியில் நாராயணசாமி தற்போது போட்டியிடவில்லை.இம்முறை இத்தொகுதியில் திமுக சார்பில் கல்வியாளர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார்..

அண்ணன்-தம்பி

இதேபோல அதிமுகவில் 3வது முறையாக அண்ணன்-தம்பி இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் 5வது முறையாக உப்பளம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 4 முறை தொடர்ச்சியாக உப்பளம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது மீண்டும் 5வது முறையாக அதே தொகுதியில் களம் இறங்கியுள்ளர்.

இவரின் தம்பி பாஸ்கர் முதலியார்பேட்டை தொகுதியில் 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது 3வது முறையாக முதலியார்பேட்டை தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.
Published by:Vijay R
First published: