புதுச்சேரியில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கோவிட் மேலாண்மை உயர்நிலைக்குழு கூட்டம் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ராஜ்நிவாசில் நடந்தது. சுகாதாரத்துறை இயக்குனர், புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார்.
இதை தொடர்ந்து, நாடு முழுவதும் ஓமைக்ரான் வகை கொரோனா பரவி வருகிறது. மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் புதுச்சேரியில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் வலியுறுத்தினார்.மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையுடன் பிற அவசிய சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளையும் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஊடரங்கு முறை ஏழை எளிய மக்களின் வாழ்வாதாத்தைப் பாதிக்கும் என்பதால் “புதுச்சேரி மாதிரி“ கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும், சித்தா/இயற்கை மருத்துவ முறை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் என்பதால், ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக சித்தா/இயற்கை மருத்துவ முறையை கையாள தனி மையம் அமைக்க வேண்டும். அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு யோகா பயிற்சி, மூலிகை சாறு, ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் என்.டி.ஆர் சிலையை சம்மட்டியால் அடித்து உடைக்க முயற்சி -ஆளும் கட்சிப் பிரமுகர் கைது...
நடமாடும் பல்ஸ்ஆக்சிமீட்டர் வாகனம், நடமாடும் பிராணவாயு வாகனம் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும், மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்,மருத்துவமனைகளில் படுக்கைகள், பிராண வாயு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும், மக்கள் கூடும் இடங்களில் கோவிட் பரிசோதனைகளில் அதிகரிக்க வேண்டும், திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொலை
இரண்டாவது அலையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.தடுப்பூசியை போடுவதை தீவிரப்படுத்த வேண்டும். 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையும் துரிதப்படுத்த வேண்டும். கோவிட் கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக இயக்க வேண்டும் என ஆளுநர் கூறியுள்ளார்.பொதுமக்கள் கூடும் இடங்களில் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும், பொது இடங்களில் கிருமிநாசினி மையங்களை திறக்க வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.