ஹோம் /நியூஸ் /இந்தியா /

பள்ளிகள் திறப்பு; அரை நாள் மட்டுமே வகுப்பு... வருகை பதிவு கட்டாயமில்லை- புதுச்சேரி அமைச்சர்

பள்ளிகள் திறப்பு; அரை நாள் மட்டுமே வகுப்பு... வருகை பதிவு கட்டாயமில்லை- புதுச்சேரி அமைச்சர்

மாதிரி படம்

மாதிரி படம்

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நவம்பர் 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் நவம்பர் 8ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார். அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் வருகைப் பதிவு கட்டாயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி, கல்வி துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரி மற்றும் 9,10,11,12 ஆம் வகுப்புகள் இயங்கி வருகின்றன.  தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால்  புதுவை, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதியில் நவம்பர் 8ம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்களும் அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்றும்,  1,3,5,7ஆம் வகுப்புகளுக்கு திங்கள், புதன் வெள்ளி ஆகிய கிழமைகளில் பள்ளி செயல்படும்.  2,4,8ஆம் வகுப்புகளுக்கு  செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில்  இயங்கும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மத்திய உணவு வழங்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அனைத்து நிலை ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தற்போது 95 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்கள் கொரோனாவாலும், நீண்டகால நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் உரிய கால அவகாசத்துக்கு பின் தடுப்பூசி செலுத்திக்கொள்வர். தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!

சுய விருப்பத்தின்பேரில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்பலாம். மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கட்டாயமில்லை. பள்ளிக்கு வராத மாணவர்களின் நலன்கருதி ஆன்லைன் வகுப்புகளையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். கட்டணம் அதிகம் வசூலிப்பதாக வாய்வழியாக பெற்றோர்கள் புகார் அளித்தாலும் எழுத்துப்பூர்வமாக புகார் தர மறுக்கின்றனர். எழுத்துப்பூர்வ புகார் அளித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து கவர்னர், முதல் அமைச்சருடன் கலந்து பேசி முடிவு செய்வோம். எல்கேஜி, யூகேஜி போன்ற மழலையர் வகுப்புகள் திறக்கப்படாது. புதுவைக்கு தனி கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிட்டோம். இதற்கு அதிக நிதி தேவைப்படும். எனவே தனி கல்வி வாரியத்தை நிறுத்தி வைத்துள்ளோம். தனி கல்வி வாரியம் அமைப்பதே அரசின் நோக்கம். மாணவர்களுக்கு இலவச பஸ்கள் இயக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பஸ்கள் இயக்கப்படும்.

மேலும் படிக்க: மகன் ஆர்யனை கைது செய்த NCB அதிகாரி ஷாருக்கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியவர் - எதற்கு?

ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. சீருடை உட்பட பொருட்கள் விரைவில் வழங்கப்படும். 18 வயதை கடந்த மாணவர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளை முழுமையாக இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிபிஎஸ்இ பள்ளிகளை முழு நேரம் இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

பள்ளி மாணவர்களிடம் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க கல்வித்துறையும், காவல்துறையும் இணைந்து செயல்படும். மத்திய பல்கலைக்கழகத்தில் 28 பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவும் புதுவை மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்கவும் டெல்லி செல்லும்போது மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவேன் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Published by:Murugesh M
First published:

Tags: Online class, Pudhucherry, School Reopen