புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழர் பாரம்பரியத்துடன் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை சார்பில் முதல்முறையாக பொங்கல் விழா இன்று காலை நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமை வகிக்க முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
உயரதிகாரிகள் பலரும் வேஷ்டி மற்றும் பட்டுப்புடவை அணிந்து வந்து விழாவில் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகை வாசலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் மாட்டு வண்டி மற்றும் உழவு தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் வைத்து பொங்கல் விழா நடைபெற்றது.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முறுக்கு மற்றும் அதிரசம் பானையில் வைத்து பொங்கல் பரிசாக கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவியரின் சார்பில் தமிழ் பாரம்பரிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர், இந்த விழாவில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்துள்ளோம். கொரோனா இல்லாத சூழ்நிலை வர இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் ஆகும். இனி நம் வாழ்க்கையை எப்படி பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று பார்க்க வேண்டும். ஊரடங்கை பயன்படுத்துவதைவிட நாம்தான் அடங்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், கொரோனாவை முற்றிலுமாக தடுக்க விஞ்ஞானப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறோம். அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இந்த பொங்கல் தடுப்பூசி பொங்கலாக அமைய வேண்டும். நாம் அருகருகே இருந்து பேசுவதை விட கோபித்துக்கொண்டு திரும்பி நின்று பேசுவது போல பேச வேண்டும். இதன்மூலம்தான் தொற்று குறையும். நாம் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்த்து கொரோனா வைரஸ் ஓடிவிட வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன் உழவர்களுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் இந்த விழா நடக்கிறது. மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வதாரம் உயர வேண்டும். இதற்காக மண்பானை வாங்கி அனைவரும் பொங்கல் வைக்க வேண்டும். வீட்டுக்கு ஒரு பானை வாங்கினால் மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரம் உயரும். பாதுகாப்பான முறையில் எப்படி நிகழ்வுகளை கொண்டாட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த பொங்கல் நிகழ்ச்சி நடந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், போகி அன்றைக்கு நிலை பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். நிலை பொங்கல் கொண்டாடும் போது தமிழர்களின் வாழ்வாதாரம் நிலைபெறும். இதனால்தான் கவர்னர் மாளிகையில் போகியன்று நிலை பொங்கல் கொண்டாடுகிறோம். நான் பேசும் அளவுக்கு சமைக்க தெரியாது. இங்கு பொங்கல் வைத்த பெண்களுக்கு நன்றி. குறுகிய காலத்தில் விழா ஏற்பாடுகளை செய்த கவர்னர் மாளிகை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்தார்.
முடிவில் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளை விஞ்ஞான ரீதியாக அனுகிறோம். இந்த நோயோடு தான் வாழ வேண்டும். முக கவசத்துடன் திறந்த வெளியில் காற்றோடுத்துடன் பொங்கலை மக்கள் கொண்டாட வேண்டும்.
வழிபாட்டு தளத்திலும் சமூக இடைவெளியுடன் கொண்டாட வேண்டும். இன்னும் 2 நாட்களில் 15-18 வயது உடையவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படும். காணும் பொங்கல் அன்று மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவினர்களை காணும் பொங்கலாக இருக்க வேண்டும். கொரோனாவை காணும் பொங்கலாக இருக்க கூடாது. வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதால் தான் கட்டுப்பாடுகளை குறைவாக போடுகிறோம் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.