விதவிதமான மதுபாட்டில்கள்,விலை குறைவு, சிறிய சுற்றுலா நகரம் இவை போதாதா புதுச்சேரிக்கு படை எடுக்க. அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானத்திற்கு அடிமையானவர்கள், சுற்றுலா தளங்களில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் வேறு சில காரணங்களுக்காக பலர் புதுச்சேரிக்கு வந்து இங்கேயே நடைபாதை மற்றும் சாலை ஓரங்களில் தங்கி விடுகின்றனர். இவர்கள் இறக்க நேரிடும் போது, இவர்களை அடையாளம் தெரியாத பிணங்களாக கருதி அடக்கம் செய்து விடுகின்றனர்.
கடந்த 2011 முதல் 2021 வரையிலான பத்து ஆண்டுகளில் அடையாளம் தெரியாத, கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் இவற்றில் எத்தனை சடலங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற விபரங்களை காவல்துறையிடம் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல்களாக கேட்டார். அதில் கிடைத்த தகவல்களை கொண்டு ஆளுநர் தமிழிசையிடம் மனுவாக அளித்துள்ளார்.
Also Read: முகம் பார்க்காமல் மலர்ந்த காதல்.. இதயநோயால் காதலி இறந்ததால் காதலன் தற்கொலை
இதன்படி புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளில் 2355 அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு பின்பு 507 சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1848 சடலங்களை அடையாளம் தெரியாத சடலங்களாகக் கருதப்பட்டு அதற்கான அரசு விதிகளின்படி அடக்கம் செய்யப்பட்டதாக ஆர்டிஐயில் தகவல் அளித்துள்ளனர். 293 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிகச் சிறிய புதுச்சேரியில் வருடா வருடம் அடையாளம் தெரியாத சடலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணம் புதுச்சேரிக்கு போதை பழக்கத்திற்கு அடிமையானோர், ஆதவற்றோர், பிச்சைக்காரர்கள் ஆகியோரின் வருகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாலும், இவற்றை கட்டுப்படுத்த உரிய காலத்தில் காவல்துறையினரும், அரசு நிதியுடன் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களை செயல்படுத்தி வருபவர்களும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததுதான் என ரகுபதி கூறியுள்ளார்.
Also Read: தாயின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது
புதுச்சேரியில் சமூக நலத்துறையினரிடம் ஆண்டிற்கு 4.5கோடி ரூபாய் நிதிஉதவி பெற்று 27முதியோர், ஆதரவற்றோர் காப்பகங்கள் செயல்பட்டு வருவதாகவும் ஆர்டிஐயில் தகவல் உள்ளது. இதுபோன்ற அடையாளம் தெரியாத சடலங்கள் அதிகரித்து வருவதால் காவலர்களுக்கு மனஉளைச்சல், கூடுதல் பணிச்சுமை, கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதோடு, அரசு மருத்துவமனையின் உடற்கூறு மருத்துவர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
எனவே அடையாளம் தெரியாத சடலங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக சாலையோரம், நடைபாதையில் தங்குவோரை உடனடியாக கண்டறிந்து அவர்களை விசாரித்து முறையே உரியவர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது ஆதரவற்றோர், முதியோர் காப்பகங்களில் சேர்க்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் ரகுபதி மனு அளித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.