புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி 16 இடங்களை பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா மற்றும் ராஜீவ் சந்திரசேகர் எம்பி இன்று ஆலோசனை நடத்தினார்கள். ரங்கசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வரும் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைச்சரவை ஒரே நேரத்தில் பதவி ஏற்க முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு குறித்து, பாஜக மேலிட பொறுப்பாளர்
நிர்மல் குமார் சுரானா கூறுகையில், “தான் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் கூற வந்ததாகவும், தேசிய கூட்டணி தலைமையில் முதலமைச்சர் இருப்பார். விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்” என்றார்.
இதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், “வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் கூற பாஜக தலைவர்கள் தன்னை சந்திக்க வந்ததாகவும், கூட்டணியாக அமைச்சரவையை பதவியேற்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்துடன் துணைநிலை ஆளுநர் தமிழிசையை இன்று மாலை 6 மணிக்கு சந்திக்க என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேரம் கேட்டுள்ளார். பாஜக ஆதரவு கடிதத்துடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உடன் ஆளுநரை சந்திக்க இருக்கிறார் ரங்கசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.