• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உ.பியில் பிரியங்கா காந்தி கைது- புதுச்சேரியில் நக்மா தலைமையில் மகிளா காங்கிரஸார் போராட்டம்

உ.பியில் பிரியங்கா காந்தி கைது- புதுச்சேரியில் நக்மா தலைமையில் மகிளா காங்கிரஸார் போராட்டம்

நக்மா போராட்டம்

நக்மா போராட்டம்

உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுசேரியில் நக்மா தலைமையில் மகிளா காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பன்வீர்பூர் கிராமத்திற்கு  சென்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையைத் தடுக்கத் தவறிய உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்தும் புதுச்சேரி மகிளா காங்கிரசார் ராஜீவ் காந்திசிலை நான்குமுனை சந்திப்பில் மாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகிளா காங்கிரஸ் தலைவியும் நடிகையுமான நக்மா தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உத்திரபிரதேச பாஜக அரசை கண்டித்தும், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசை கண்டித்தும், கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நக்மா, ‘பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு இரண்டு நாள் ஆகியும் இதுவரை அவர் விடுதலை செய்யப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்தும் உடனடியாக  பிரியங்காவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது’ என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து தான் தங்கியிருந்த விடுதிக்கு  நக்மா மற்றும் மகிளா காங்கிரசார் சென்றனர். அப்போது விடுதியில் இருந்து வெளியேறிய புதுச்சேரி பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமசிவாயத்தை கண்டவுடன் மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பிய மகளிர் காங்கிரசார், அவர் புறப்பட தயாரான போது அவர் காரை முற்றுகையிட்டு பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆனால் அனைவரையும் பார்த்து கும்மிட்ட படி அமைச்சர் சென்றார். இதனால் தனியார் விடுதி வளாகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: