புதுச்சேரியில் 70 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய படப்பிடிப்பு: பிருத்விராஜ், ராஷிகண்ணா பங்கேற்பு

படப்பிடிப்பில் ராஷிகண்ணா

புதுச்சேரியில் 70 நாள்களுக்குப் பிறகு திரைப்படப் பிடிப்பு தொடங்கியுள்ளது.

  • Share this:
கடற்கரையையொட்டிய புதுச்சேரி நகரப் பகுதி பிரெஞ்சு கட்டிடங்களுடனும், எழில்மிகு கடற்கரையோடும் திகழ்கிறது. இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து திரைப்படம் மற்றும் சின்னத்திரை, வெப்சீரியஸ், விளம்பர படப்பிடிப்புகளை நடத்திச் செல்வார்கள். லைப் ஆப் பை உட்பட ஹாலிவுட் படப்பிடிப்புகளும் நடந்துள்ளது. சமீபத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த டிசம்பரில் படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதியளித்தது.  பிப்ரவரியில் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியது. இதனால் ஏப்ரல் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. சுமார் 2 மாதமாக புதுச்சேரியில் எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இந்நிலையில் ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. 100 பேருடன் படப்பிடிப்பை நடத்தலாம், கொரோனா விதிமுறைகளை பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியது. பழைய நீதிமன்ற வளாகத்தின் அருகில் இன்று படப்பிடிப்பு நடந்தது. இதில் நடிகர் பிருத்திவிராஜ், நடிகை ராஷிகண்ணா நடித்த மலையாள திரைப்படம் பிரும்மம் சினிமா படப்பிடிப்பு நடந்தது.

சூட்டிங்கில் ராஷிகண்ணா


ராஷிகண்ணா ஓட்டலின் அருகில் காரில் இருந்து இறங்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஏற்கனவே வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்திய போது கொரோனா ஊடரங்கில் இப்பட குழு சிக்கி கொண்டது. இதனால் பிரெஞ்சு கட்டிடட பின்னணியுள்ள பகுதியில் மீதி படப்பிடிப்பை நடத்த இயக்குனர் ரவி கே.சந்திரன் முடிவு செய்து புதுச்சேரியை தேர்வு செய்தார்.

இதன் அடிப்படையில் தற்போது நடைபெறும் படப்பிடிப்பு இன்னும் ஒரு வார காலம் நடக்கும் என தெரிகிறது. படபிடிப்பில் அரசு நிர்ணயித்ததை விடகுறைவாக 80 ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. 70 நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பு துவங்க அனுமதி அளித்த புதுச்சேரி அரசுக்கு நன்றி என படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி இருப்பதால் உணவகங்கள், தங்கும் விடுதிகள், வாடகை கார் நிலையங்கள் போன்றவற்றிற்கு வருமானம் வர துவங்கியுள்ளது. புதுச்சேரியில் நாள் ஒன்றிற்கு திரைப்படத்திற்கு படப்பிடிப்பு நடத்த 5,000 ரூபாய், சின்னத் திரைப்படப் பிடிப்பிற்கு 3,000 ரூபாய் என அரசு கட்டணமாக வசூலித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா காலத்திற்கு பிறகு மதுபானம், பெட்ரோல், படப்பிடிப்பிற்கு கொரோனா வரி என விதித்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் நாள் ஒன்றிற்கு திரைப்படத்திற்கு 25,000 ரூபாய், சின்ன திரைப்படப்பிடிப்பிற்கு 15,000 ரூபாய் என அரசு உயர்த்தி வசூலிக்கிறது. இதனால் உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும். இதனால் பல நிறுவனங்கள் புதுச்சேரிக்கு வந்து படப்பிடிப்பை நடத்தும் என என படப்பிடிப்பு புதுச்சேரி
ஏற்பாட்டாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
Published by:Karthick S
First published: