காணும் பொங்கல் என்றால் சுற்றுலா நகரமான புதுச்சேரி களைகட்டி இருக்கும்.அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். ஆனால் இந்த முறை சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கடற்கரை சாலை, பாரதி பூங்கா, அருங்காட்சியகம், அரவிந்தர் ஆசிரமம், வழிபாட்டு தலங்கள், தாவரவியல் பூங்கா, சண்டே மார்க்கெட், படகு துறை, ஊசுடு ஏரி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. காரணம் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் செல்லவில்லை. இதனால் மக்கள் வரத்து முற்றிலும் நின்று போய் உள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை காணும் பொங்கலன்று கடலூர், விழுப்புரம், மரக்காணம், திருவண்ணாமலை, பண்ருட்டி, செஞ்சி உட்பட பல்வேறு தமிழக பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வெகுவாக வருவார்கள்.
Also read: ஓடும் பேருந்தில் மாரடைப்பு: உயிருக்கு போராடிய இளைஞரை முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர்!
மேலும் வார விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். ஆனால் நோய் தொற்று புதுச்சேரியிலும் அதிகரித்து வருவதன் காரணமாக வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் தமிழக மாவட்ட சுற்றுலா பயணம் வருகை முற்றிலும் நின்று போய்விட்டது. இதனால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடியுள்ளன. இதனால் சிறு வியாபாரம் முதல் பெரிய அளவிலான வியாபாரம் செய்தவர்களை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக காணும் பொங்கல் அன்று சுற்றுலா தலங்களில் உள்ள கடைகளில் சிறப்பான விற்பனை நடைபெறும். ஆனால் இந்த முறை பயணிகள் இல்லாத காரணத்தினால் விற்பனை இன்றி வியாபாரிகள் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறார்கள். இதனிடையே தமிழகத்தை போன்று திங்கட்கிழமை புதுவையிலும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுள்ள ஊழியர்கள், மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏற்படும் சிரமத்தையும், ஒரே நேரத்தில் பஸ்நிலையம், ரயில் நிலையத்தில் மக்கள் அதிகம் கூடும் சூழ்நிலை உருவாகி தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு நாளையும், நாளை மறுநாளும் ஆகிய 2 தினங்கள் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
ஆனால், புதுவையில் அதுபோல் விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஊழியர்கள், மாணவர்கள் தமிழக பஸ்கள் இன்று இயக்கப்படாததால் பொங்கல் கொண்டாட தங்கள் பிராந்தியங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் புதுவை திரும்ப முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆகவே, நாளை திங்கட்கிழமை புதுவையில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும், இந்த விடுமுறையை வரும் சனிக்கிழமை அன்று வேலை நாட்களாக அறிவித்து ஈடு செய்யலாம் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க: பார்க்கிங் கட்டணம் வசூலிக்க மால்களுக்கு உரிமையில்லை: கேரள உயர்நீதிமன்றம் அதிரடிஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.