தமிழகம், புதுச்சேரியில் பிரச்சாரம் ஓய்ந்தது - நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

தமிழகம், புதுச்சேரியில் பிரச்சாரம் ஓய்ந்தது - நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

தேர்தல் பரப்புரை

தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது.

 • Share this:
  தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் நாளை மறுதினம் ( ஏப்ரல் 6 ) தேர்தல் நடக்கவுள்ளது. இண்று தேர்தல் பிரச்சாரம் செய்ய இறுதிநாள் என்பதால் அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, காங்கிரஸ், பா.ஜ.க, அ.ம.மு.க, தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு 7 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் மொத்தம் 44 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் 7ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் 3,559 வேட்பாளர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதில் 466 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகளும், 207 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகளும் உள்ளன.புதுச்சேரியில் 323 வேட்பாளர்களில் 54 பேருக்கு எதிராக (17 சதவீதம்) அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகளும், 28 பேருக்கு எதிராக (9 சதவீதம்) தீவிரமான குற்ற வழக்குகளும் உள்ளன. ஒரு தொகுதிக்கு 3 அல்லது அதற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளை உடையவர்களாக இருந்தால், அது ரெட் அலர்ட் தொகுதியாகக் குறிப்பிடப்படும். அந்த வகையில் தமிழகத்தில் 74 ரெட் அலர்ட் தொகுதிகளும், புதுச்சேரியில் 8 தொகுதிகளும் உள்ளன.மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

  இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இன்று மாலை 7 மணி முதல் வாக்குப் பதிவுகள் முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-ன் கீழ், பல்வேறு தேர்தல் விதிமுறைகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைமுறைக்கு வருகின்றன. தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது. தேர்தல் விவகாரத்தை, திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

  சட்டப்பேரவைத் தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 7 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளருக்கும் அனுமதி இல்லை.
  Published by:Ramprasath H
  First published: