தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும்... வெப்பச் சலனத்தால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்...

தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும்... வெப்பச் சலனத்தால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்...

கோப்புப் படம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த இரண்டு நாட்களுக்கு 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை நிலவும் எனவும், பகல் 12 மணி முதல் 4 மணிவரை வெளியே செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 • Share this:
  கோடை வெயிலின் தாக்கம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், தரைப்பகுதியை நோக்கி அனல்காற்று வீசுகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

  இந்தநிலையில் வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், ஏப்ரல் 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கணித்துள்ளது.

  அதேபோல ஏப்ரல் 5 முதல் 7 ஆம் தேதி வரை கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட நான்கிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும்பாலான இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்பதால், பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது, மற்றும் ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி பாரன்ஹீட் பதிவானதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

  இதனிடையே, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலூர், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக ஏப்ரல் 7 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க...  ஈஸ்டர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாட்டம்...

  காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர், தர்பூசணி மற்றும் பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில், வெயில் சுட்டெரித்ததால், சாலையோர வியாபாரிகளிடம் பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு உள்ளிட்டவற்றை வாங்கிப் பருகினர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: