புதுச்சேரியில் சம்பள உயர்வு அளித்த முதலமைச்சரின் படத்திற்கு அலங்காரம் செய்து அலகு குத்தி அரசு ஊழியர்கள் தேர் இழுத்தனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 1,311 வவுச்சர் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 6000 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் ரங்கசாமி 6,000 ரூபாய் சம்பளத்தில் இருந்து 10,000 ரூபாயாக சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி அறிவித்து ஆறு மாதம் ஆகியும் இதுவரை வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக பொதுப்பணித்துறை ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாய் உயர்த்தப்பட்ட 10,000 ரூபாய் சம்பளம் பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
10 ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை தீர்த்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு நூதன முறையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரங்கசாமியின் உருவப்படத்தை அலங்கரித்து தேரில் வைத்த ஊழியர்கள் அலகு குத்தியும், தேர் இழுத்தும், முதுகில் அலகு குத்தி வாகனத்தில் தொங்கியபடியும், நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
முதலமைச்சர் ரங்கசாமிக்கு அரோகரா ! அரோகரா!! என கோஷங்களை எழுப்பியபடி இவர்கள் சுதேசி பஞ்சாலையிலிருந்து மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக மணக்குள விநாயகர் கோவிலை அடைந்தது. அங்கு முதல் அமைச்சர் ரங்கசாமி நலமுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.