• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலானது ஊரடங்கு.. பேருந்துகள் ஓடவில்லை.. நண்பகலுடன் கடைகளும் அடைப்பு..

புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலானது ஊரடங்கு.. பேருந்துகள் ஓடவில்லை.. நண்பகலுடன் கடைகளும் அடைப்பு..

புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்த புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது.

  • Share this:
தமிழகத்தை போலேவே புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை அரசு அண்மையில் விதித்திருந்தது. இதேபோல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகளும் வரும் 24ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன் காரணமாக புதுச்சேரி பேருந்துநிலையம், கடற்கரை சாலை, பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 2,049 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75,024 ஆகவும், உயிரிழப்பு 1,018 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது 14,829 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 59,177 பேர் குணமடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, காய்கறி, மளிகை உட்பட அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்து, ஆட்டோ, டெம்போக்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு பேருந்து நிலையம் மூடப்பட்டது. சரக்கு போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

அரசின் முக்கிய துறைகள் தவிர்த்த மற்ற துறைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பார்சல் சேவைக்கு மட்டும்
அனுமதிக்கப்பட்ட உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்பவருக்கு அடையாள அட்டை கேட்டு அனுமதிக்கப்பட்டனர்.
தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அடையாள அட்டை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டனர். இந்த கட்டுப்பாடு இன்று அதிகாலை முதல் 24 ம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பூங்காக்கள், கடற்கரை சாலைகள் மூடப்பட்டுள்ளன. பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வரும் 24 ம் தேதி வரை தொடரும்.

மேலும் படிக்க.. புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்தது..

ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மற்றும் சாராயக் கடைகள் மேலும் 2 வாரங்களுக்கு திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதி நள்ளிரவு வரை கடைகள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள அனைத்து வங்கிகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கின. 2 மணிக்கு பிறகு நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். புதுச்சேரி-தமிழக எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: