கொரோனா நிவாரண பொருட்களை வழங்கி புதுச்சேரிக்கு கைக்கொடுத்த பிரெஞ்சு அரசு

துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவப் பொருட்கள் சுகாராத்துறைச் செயலர் அருண்ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 • Share this:
  கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. மருத்துவப் பொருட்கள், உபகரணங்கள் ஆகியவற்றை அரசுக்கு வழங்கி வருகின்றன.இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் புதுச்சேரி பிரெஞ்சு தொழில்முனைவோர் சங்கம் இணைந்து ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான 500 கவச
  உடைகள், 500 என்ஆர்எஸ்எம் முகக்கவசங்கள் மற்றும் 23 என்ஐவி முகக்கவசங்கள் ஆகியவற்றை இன்று புதுச்சேரி அரசிற்கு வழங்கியது.

  முன்னதாக துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானாவில் இருந்து காணொளி மூலமாக புதுச்சேரிக்கான பிரெஞ்சு தூதர் லீஸ் தல்போ பரே மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளை வரவேற்று கலந்துரையாடினார். அப்போது, பிரெஞ்சு குடியுரிமை மக்களின் உதவிக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

  மேலும், அவசர பணியின் காரணமாக தான் தெலங்கானாவில் தங்கி இருப்பதால் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் மக்களுக்கான உதவிகளில் காலதாமதம் ஆகிவிடக்கூடாது
  என்பதால் காணொளி மூலமாக கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

  காணொளி மூலமாக பேசிய துணைநிலை ஆளுநர்,
  புதுச்சேரிக்கும் பிரான்சுக்கும் இடையிலான பண்பாட்டு அரசியல் உறவுகள் மிகவும் வலுவானவை. புதுச்சேரியை உருவாக்கியதில் பிரெஞ்சுகார்களின் பங்களிப்பு மிகவும் பெரிது. பிரான்சுவா மார்தேன் என்பவரால் ஒரு சிறிய மீனவர் கிராமமாக இருந்த புதுச்சேரி இன்று ஒன்றியப் பகுதியாக வளர்ந்திருக்கிறது என பெருமிதத்துடன் ஆளுநர் நினைவு கூர்ந்தார்.

  பல பிரெஞ்சு அறிஞர்கள் தமிழ் நூல்களை பாதுகாத்து வந்திருக்கிறார்கள். கட்டிடக்கலை, கல்வி, கலாச்சாரம் ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்றும்
  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்பும் உறவும் எதிர்காலத்தில் கல்வி, கலாச்சாரம், மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதுச்சேரி வளர்ச்சி அடைய பெரிதும் உதவியாக இருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் கொரோனாவை நாம் வெற்றி கொள்ள முடியும். கொரோனா இல்லாத புதுச்சேரியை, கொரோனா இல்லாத உலகை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.

  துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவப் பொருட்கள் சுகாராத்துறைச் செயலர் அருண் மற்றும் பொருட்கள் துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநில சுகாதாரத் திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு, துணைநிலை ஆளுநரின் தனிச்
  செயலர் ஸ்ரீதரன், புதுச்சேரி பிரெஞ்சு தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் குணசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
  Published by:Vijay R
  First published: